” படிக்க வாங்கடே … ” – கலெக்டரின் கலக்கல் ‘மூவ்’!
பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மேற்கொண்ட சிறப்பான முயற்சியால், 416 மாணவர்களின் வாழ்க்கையில் காணாமல் போன கல்வி வெளிச்சம் அவர்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
பள்ளியில் இருந்து இடையில் நின்றுபோன மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகம் உள்ளதாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது. இதையடுத்து, முதலில் திருப்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட 6 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற ஆட்சியர், பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவ, மாணவிகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் பேசி மீண்டும் பள்ளியில் சேர வைத்தார். இதேபோல, மாவட்டம் முழுவதும் நிறைய மாணவர்கள் உள்ளனர் என்பதை அறிந்த ஆட்சியர், இது குறித்து கணக்கெடுக்க கல்வித்துறை அதிகாரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதிர்ச்சியடைந்த ஆட்சியர்
இதனையடுத்து அவர்கள் களத்தில் இறங்கி மேற்கொண்ட கணக்கெடுப்பு மூலம் 1,898 மாணவர்கள் இடை நின்றிருப்பது கண்டறியப்பட்டது. இது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும். இந்த தகவல் ஆட்சியர் பாஸ்கர பாண்டியனையும் அதிர்ச்சிக்குள்ளானதையடுத்தே அவர், இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான முதற்கட்ட முயற்சியை எடுத்தார்.
முதலில் நாட்றாம்பள்ளி வட்டம் தாசிரியப்பனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் அதிகளவிலான இடை நின்ற மாணவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறை அலுவலர்கள், வருவாய்த் துறையினருடன் தாசரியப்பனூர் கிராமத்துக்கு சென்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து இடைநின்ற 23 மாணவர்களின் வீட்டின் முகவரியை கேட்டறிந்து, நேரடியாக மாணவர்களின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிறகு, மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக தேடிச்சென்று கல்வியின் முக்கியத்துவம், கல்வியால் மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு மேம்படும் என்பதை பெற்றோரிடம் விளக்கி கூறினார். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினாலும், குழந்தை திருமணத்தை அனுமதித்தாலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி எச்சரிக்கவும் செய்தார். இதனையடுத்து பெற்றோர்களும் புரிந்து கொண்டு தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்க முன்வந்ததைத் தொடர்ந்து, மாணவர்களை தனது காரிலேயே பள்ளிக்கு அழைத்து வந்தார்.
இதே போல் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்ற ஆட்சியர் அங்கு பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை தேடிச் சென்று அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்தார். இவ்வாறு அவர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால், நேற்று ஒரே நாளில் மட்டும் 416 இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
“கல்வியும் மருத்துவமும் எனது இரு கண்கள்” என்று கூறி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கேற்ப ‘இல்லம் தேடிக் கல்வி’ ‘ நான் முதல்வன் திட்டம்’ பள்ளிகளில் காலை சிற்றுண்டி… எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்க, இடைநின்ற மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடி, அவர்களின் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் காட்டிய நேரடியான ஈடுபாடு, அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவரது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட எளிய மக்களிடம் பச்சாதாபத்துடன் அரசு அதிகாரிகள் எப்படி அணுகி, அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவ வேண்டும் என்பதையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.