தாமுவின் ‘மோட்டிவேசன்’ பேச்சு: வெற்றிக்கான விலை என்ன?

மிழ் சினிமாவில் நடித்தது போதும் என்ற மன திருப்தியிலோ அல்லது வேறு காரணங்களாலோ சில நடிகர்கள் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிடுவார்கள். சிலர் ஏதாவது பிசினஸ் பக்கம் சத்தமில்லாமல் ஒதுங்கி விடுவார்கள். வாய்ப்புகள் கிடைக்காத அல்லது ஓரங்கப்பட்ட வேறு சில நடிகர்கள் சோப்பு, மசாலா, ஊதுவத்தி விளம்பரங்கள் முதல் ஆன்மிக சொற்பொழிவாளர்/மதபோதகர் அவதாரங்கள் வரை எடுப்பது உண்டு. இதில் நடிகர் தாமு எடுத்திருப்பது Motivational Speaker எனும் ‘ஊக்கமூட்டும் பேச்சாளர்’ அவதாரம்..!

அவரது இந்த அவதாரத்துக்கு என்ன காரணமோ இருந்துவிட்டுப் போகட்டும். அதற்குள் நாம் நுழையத் தேவையில்லை. அதே சமயம் தன்னை அப்துல் கலாமின் சீடர் எனச் சொல்லிக்கொண்டு, ‘பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துகிறேன், போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்…’ என்ற இன்ட்ரோவுடன், அவர் சமீப காலமாக ஒவ்வொரு பள்ளியாக சென்று கொடுக்கும் விழிப்புணர்வு பயிற்சியும் பேச்சும்தான் சமூக வலைதளங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

சர்ச்சையான மோட்டிவேஷன் பேச்சு

பல இடங்களில் பள்ளிகளுடன் இணைந்து காவல்துறையினரே தாமுவை அழைத்து வந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர். இவரது இந்த மோட்டிவேசன் பேச்சைக் கேட்கும் மாணவர்கள், மாணவிகள், காவலர்கள், ஏன் ஆசிரியர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு கதறி அழும் வீடியோக்களைப் பார்க்க முடிகிறது.

“இது நல்ல விஷயம்தானே… இதற்காக தாமுவைப் பாராட்டத்தானே வேண்டும்..?” என்று ஒரு தரப்பினரும், “அவரது நோக்கம் நல்லதுதான் என்றாலும், அவரது பேச்சு மாணவர்களைத் தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவர்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது” என இன்னொரு தரப்பினரும் கூறுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

“இதில் எது சரி..? மாணவர்களை நல்வழிப்படுத்த இது சரியில்லை என்றால் வேறு என்ன மாதிரி பேசலாம்..? ” என்று அரசு மனநல மருத்துவர் லட்சுமியிடம் பேசினோம்.

‘இப்படியும் நல்வழிப்படுத்தலாம்’

இது குறித்து நம்மிடம் பேசிய அவர், “மாணவர்கள் மத்தியில் இந்த மாதிரி ‘எமோஷனல் அட்டாக்’ செய்வது இன்னுமே மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். அது ஒரு தீர்வைத் தராது.

போதைப் பொருட்களில் இருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றால் யாரைத் தொடர்புகொள்ளவேண்டும்? என்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் தாமு பேசும் விஷயங்களில் இல்லை. பள்ளிக் கல்லூரிகள் மன நல ஆலோசகரையோ அல்லது மனநல மருத்துவரையோ ஆலோசித்து தாமு போன்றவர்களை விழிப்புணர்வு ஏற்படுத்த அழைக்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை பெறவேண்டும்.

மனநல மருத்துவர் லட்சுமி

ஒரு படம் பார்க்கிறோம், அந்த படத்தில் அம்மாவைப் பற்றி ஒரு எமோஷனலாக ஒரு சீன் வருகிறது என்றால், அப்போது நாம் அழுகிறோம் அல்லவா? அதே மாதிரி இவர் பேசும்போது நாம் அழுகிறோம், அவ்வளவுதான். அந்த சூழ்நிலைக்கு நாம் ஒரு எமோஷனல் கொடுக்கிறோம். இதில் எப்படி ஒரு தீர்வை எதிர்பார்க்க முடியும்?

ஆன்லைன் ஆலோசனை உதவி எண்

மாணவர்களுக்கு அறிவுசார்ந்த விஷயங்களைத் தான் நாம் சொல்லவேண்டும். அப்படிச் சொல்வதன் மூலமே கெட்ட பழக்கத்திலிருந்து அவர்கள் வெளிவர வாய்ப்பு அதிகம். மாணவர்களுக்கென அரசு உதவி எண்கள் இருக்கின்றன. மாணவர்களுக்கு பிரச்னை இருந்தால் 14416 இந்த உதவி எண்ணில் அழைத்தால், ஆன்லைன் மூலமாக கூட ஆலோசனை பெறலாம்” என்று சொல்லி முடித்தார்.

நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் கவனம் தேவை என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள் லட்சுமி போன்ற மனநல மருத்துவர்கள். பள்ளி நிர்வாகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. 자동차 생활 이야기.