தமிழ்நாட்டில் ஐபோன் 17 உற்பத்தி… ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு!
ஆப்பிள் நிறுவனம் வருகிற 2024 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையில் ஐபோன் 17 தயாரிப்பைத் தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், தனது விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தவும், ஐபோன் உற்பத்திக்காக சீனாவையே பெரிதும் நம்பி இருக்காமலும் இருப்பதற்காக, அதன் உற்பத்திகள் சிலவற்றை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையொட்டியே ஆப்பிளின் முக்கிய ஒப்பந்த தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையில் ஐபோன் 17 ஐ தயாரிப்பை அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஃபாக்ஸ்கானில் மட்டுமல்லாது பெக்ட்ரான், டாடா நிறுவனத்தின் விஸ்ரான் ஆலைகளிலும் உற்பத்தியை தொடங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
2024 ஜூன் மாத வாக்கில் உற்பத்தியை தொடங்கி 2025 ஆம் ஆண்டு முதல் ஐபோன் 17 ஐ விற்பனை செய்ய ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும்
தமிழ்நாட்டில் ஐபோன் 17 உற்பத்தி செய்யப்படுவதினால், அது நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் புதிய வேலைகளை உருவாக்கவும் கணிசமான பங்களிப்பை ஆற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஐபோன் 17 ஐ தயாரிப்புக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் மட்டுமே, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொருளாதார பலன்கள் ஏற்படுவது மட்டுமின்றி, மாநிலத்தின் சமூக வளர்ச்சியிலும் இது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்காணோரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். அதுமட்டுமல்லாது கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக மேம்பாட்டு திட்டங்களிலும் ஃபாக்ஸ்கான் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் சமூகத்தினருக்கு மேலும் பயனளிப்பதாக இருக்கும்.
புதிய வணிக வாய்ப்புகள்
ஃபாக்ஸ்கான் ஏற்கனவே தமிழ்நாட்டில் 25,000 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது, மேலும் உற்பத்தியை அதிகரிக்கும் நிலையில், இன்னும் அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஃபாக்ஸ்கான் அதன் தமிழ்நாடு ஆலையில் அதிக முதலீடு செய்துள்ளது. இந்த ஆலை தற்போது உலகின் மிகவும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி வசதிகள் கொண்டதாக உள்ளது.
ஃபாக்ஸ்கான் உள்ளூர் சப்ளையர்களுடன் இணைந்து ஐபோனுக்கான உதிரிபாகங்களை உருவாக்கி வருவதால், அது இது தமிழ்நாட்டில் புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்க உதவுகிறது.