அரசின் அபார முன்னெடுப்பு… உலகமெல்லாம் பரவும் தேமதுரத் தமிழோசை..!
அது 1960 களின் பிற்பகுதி… அண்ணா மறைவுக்குப் பின்னர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற கலைஞர் கருணாநிதி, அரசுக் கல்லூரிகளில் தமிழைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டார். அது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், அப்போது ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு சவாலை எதிர்கொண்டனர்.
அது – தமிழ் பாடநூல் பற்றாக்குறை. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு பாடநூல் கழகம், 1970 மற்றும் 1978 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 875 புத்தகங்களை – ஆண்டுக்கு சராசரியாக 100 புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணியில் இறங்கியது. இந்த முயற்சி தமிழ் பதிப்பகத்துறையில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தியது.
அரசியல், ஆட்சி, இலக்கியம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இது “கலைஞர் கருணாநிதியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டிலும் அவரது ஆட்சியிலேயே தான் இணையவழி மூலம் கல்வித் திட்டங்களை வழங்குவதற்கான தமிழ் இணைய கல்விக் கழகம் (TVA)உருவாக்கப்பட்டது. இதனையடுத்து டி.வி.ஏ இணையதளத்தில் 875 புத்தகங்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கி பதிவேற்றம் செய்யப்பட்டது. தமிழ் வழியான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருந்தது. இதற்கு நல்ல வரவேற்பும் தேவையும் அதிகரித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு பாடநூல் கழகம், இந்த புத்தகங்களை 2017 ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தியது.
கலைஞரும் ஸ்டாலினும்
சரி… பாட நூல்களுக்கு வெளிநாட்டு புத்தகங்களை மொழிபெயர்த்தோம் என்றாலும், தமிழ் மொழி மட்டும் எந்த வகையில் குறைந்து போனது. இலக்கிய, பண்பாட்டு செறிவுமிக்க, அறிவுக்களஞ்சியமிக்க தமிழ் நூல்கள் கொட்டிக்கிடக்கின்றனவே தமிழ் வீதியில். இவற்றையெல்லாம் மொழி பெயர்த்து தமிழின் பெருமையையும் அதன் இலக்கிய நயமிக்க படைப்புகளையும் பிற நாட்டவர்களும் அறிந்து கொள்ள வேண்டாமா..?
அதைத்தான் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். தந்தை கருணாநிதி, பிறமொழி புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வைத்து தமிழ் பதிப்பகத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார் என்றால், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழை எடுத்துச் செல்லவும், ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்களை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகளுக்கு வித்திட்டு, தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் பரப்பும் புரட்சியை செய்து கொண்டிருக்கிறார் தனயன் ஸ்டாலின்.
அந்த வகையில், தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு நூல்களும் தமிழிலிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் மிக குறைவு. இத்தனை ஆண்டுகாலத்தில் இலக்கிய செழுமை வாய்ந்த தமிழிலிருந்து 100 புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற மொழிகளிலிருந்து சுமார் 1000 புத்தகங்கள் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மிக குறைவாகும்.
4 ஆண்டுகள்… 1000 புத்தகங்கள்
இந்த குறையைப் போக்க தமிழ்நாடு அரசு சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 1,000 தமிழ் புத்தகங்களை ஸ்பானிஷ், பிரஞ்சு உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளது.
“தமிழை உலகுக்கு எடுத்துச் செல்வது, உலகைத் தமிழுக்குக் கொண்டு செல்வது” என்ற கருப்பொருளுடன் முதலாவது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18 ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள 2-வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 50 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டு உரிமைகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஒரு உரிமை மையமாக இது செயல்படும்.
கடந்த ஆண்டு கண்காட்சியில், 100 தமிழ் புத்தகங்களை மொழிபெயர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 40 புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அடுத்த 4 ஆண்டுகளில் 1,000 தமிழ் புத்தகங்களை மொழிபெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பொது நூலக இயக்குனரக இயக்குநர் கே.இலம்பஹாவத்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் இணை இயக்குநர் (மொழிபெயர்ப்புகள்) சங்கர சரவணன், வரவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியின்போது உலகில் அதிகம் பேசப்படும் 20 மொழிகளில் இருந்து அறிஞர்கள், பதிப்பாளர்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இலக்கிய முகவர்களுக்கான பயிற்சி பட்டறையை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில்,
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாடிச் சென்ற முண்டாசு கவிஞர் இப்போதிருந்தால் அகம் மகிழ்ந்திருப்பார்!