நிலக்கரி உற்பத்தி: ஜொலிக்கும் தமிழகம்!
இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு பல்வேறு வகையில் பங்காற்றி வரும் நிலையில், எரிசக்தி துறையிலும் தமிழகத்தின் பங்களிப்பு எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதை ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. அதன்படி 2022-23 ஆம் ஆண்டில் 22.480 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து தமிழ்நாடு, நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி படிமங்கள் நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு & காஷ்மீர் போன்ற மாநிலங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இவை தவிர ஒடிசா, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சிறிய அளவில் கிடைக்கிறது.
தமிழ்நாடு முதலிடம்
இந்த நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 2021-22 ல் 47.492 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், அது 2022-23 ஆம் ஆண்டில் 5.27% குறைந்து 44.990 மெட்ரிக் டன்னாக சரிந்துள்ளதாக நிலக்கரி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலக்கரி கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி நிலக்கரி உற்பத்தியில், தமிழ்நாடு 49.97%, குஜராத் 27.37% மற்றும் ராஜஸ்தான் 22.67% என்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியை அனுப்புதலின் அடிப்படையில், தமிழ்நாடு அதிகபட்சமாக 24.166 மெட்ரிக் டன் அல்லது 51.61%, குஜராத் 26.27%, மற்றும் ராஜஸ்தான் 22.12% என்ற நிலையில் உள்ளன. தமிழகத்தின் நிலக்கரி உற்பத்தி 2021-22 ல் 23.635 மெட்ரிக் டன்னாகவும், 2020-21 ல் 18.026 மெட்ரிக் டன்னாகவும், 2019-20 ல் 23.516 மெட்ரிக் டன்னாகவும், 2018-19 ல் 23.041 மெட்ரிக் டன்னாகவும் இருந்தது.
மத்திய மின்சார ஆணையத்தால் (CEA) அறிவிக்கப்பட்ட தேசிய மின்சாரத் திட்டம் தொகுதி-I உற்பத்தியின்படி, இந்தியாவின் நிலக்கரி இருப்பு 40.9 பில்லியன் டன். இதில் சுமார் 82 சதவிகிதத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 33,309.53 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான இந்த பங்களிப்பில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த நிலக்கரி இருப்பில் ஒரு சிறிய சதவீதமே தோண்டப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கான பொருளாதார செலவைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நிலக்கரியை எடுத்துச் செல்வதற்கு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், நிலக்கரி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பது மாநில அளவிலும் தேசிய அளவிலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இயற்கை வளங்களை பாதுகாத்து, நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதிலும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதிலும் தமிழ்நாடு எந்த அளவுக்கு பொறுப்புடன் செயல்படுகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம்தான் ஒன்றிய நிலக்கரி அமைச்சகத்தின் மேற்கூறிய புள்ளிவிவரங்கள்!