தமிழ்நாட்டில் அக்.31 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்த உடனேயே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடக்கத்தில் அரபிக்கடல், வங்கக்கடலில் புயல்கள் உருவான போதிலும், வட கிழக்கு பருவமழை வலுக்குறைந்தே காணப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் 29 ஆம் தேதி தமிழ்நாட்டில் கடலூர், சிவகங்கை , மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி , பெரம்பலூர், கள்ளக்குறிச்சி , திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது என்றும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 39 சதவீதம் குறைவு
என்றும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வருகிற 31 ஆம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை தெரிவித்துள்ளது.
அக்.31 வரையிலான நிலவரம்
25.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.10.2023 முதல் 28.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30.10.2023 மற்றும் 31.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.