“மண் சோறு சாப்பிட்டா படம் ஓடுமா? ” – சூரியின் துணிச்சலுக்கு வைரமுத்து பாராட்டு!

நடிகர் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படம் நேற்று வெளியானது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இத்திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என சூரியின் மதுரை ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிட்டனர்.
இது சூரி கண்ணில் பட அவர்களை கண்டித்தும் வருத்தம் தெரிவித்தும் பேசியுள்ளார். அதில் அவர் “தம்பீங்களா இது ரொம்ப முட்டாள்தனம். எங்கேயோ இருந்துட்டு நாம இப்படி பண்ணுனா என் காதுக்கு வரும் என்னை இம்ப்ரஸ் பண்ணலாம்ன்னு அல்லது படம் நல்லா வரணும்னு நீங்க இப்படி பண்ணி இருக்கலாம். ஆனால் ஒரு படம் நல்லா இருந்தா மக்களுக்கு பிடிக்கும், அந்த படம் நல்லா ஓடும். அதை விட்டுட்டு மண் சோறு சாப்பிட்டா எப்படி படம் ஓடும்? இது ரொம்ப வேதனையா இருக்கு” எனக் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து பாராட்டு!
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து, சூரியின் இந்த கருத்தை தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
“திரைக்கலைஞர்
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்
தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்
மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது
இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று சொல்வதற்குத்
துணிச்சல் வேண்டும்
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்
தங்கள் ரசிகர் கூட்டத்தை
இப்படி நெறிப்படுத்தி
வைத்திருந்தால்
கலையும் கலாசாரமும்
மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்
மண்சோறு தின்றால் ஓடாது
மக்களுக்குப் பிடித்தால்
மாமன் ஓடும்
பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை
‘பலே பாண்டியா’
என்று பாராட்டுகிறேன்”
என்று கூறியுள்ளார்.