‘ஆபரேஷன் சிந்தூர்’: இந்திய ராணுவம் வெளியிட்ட புதிய தகவல்கள்!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தின. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பகுதிகளில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் இருதரப்பு போர் கடந்த சனிக்கிழமையன்று மாலை முடிவுக்கு வந்தன.
இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’நடவடிக்கையின் வெற்றி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, மற்றும் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகிய முப்படைகளின் தலைவர்களும் டெல்லியில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டனர். அவை இங்கே…
பயங்கரவாதத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல்: பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதிகளை தண்டிப்பதற்காக, மே 7 அன்று பாகிஸ்தானின் முரிட்கே மற்றும் பவல்பூர் உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், உயர்மட்ட இலக்குகளான யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவுப், மற்றும் முடசிர் அகமது உட்பட, கொல்லப்பட்டனர்.
40 வீரர்களை இழந்த பாகிஸ்தான் ராணுவம்: மே 7 முதல் 10 வரை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) நடந்த மோதல்களில் பாகிஸ்தான் ராணுவம் 35-40 வீரர்களை இழந்தது. இந்திய படைகள், பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து கடுமையான பதிலடி கொடுத்தன.
இந்தியாவின் கட்டுப்பாடு மற்றும் புலனாய்வு: லெப். ஜென. ராஜிவ் காய், இந்தியா தனது தாக்குதல்களை கட்டுப்பாட்டுடனும், துல்லியமாகவும் நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்ததாகவும் தெரிவித்தார்.
விமானப்படையின் துல்லிய தாக்குதல்கள்: இந்திய விமானப்படை (IAF), பாகிஸ்தானின் சக்லாலா, ரஃபிக், ரஹீம் யார் கான், சர்கோதா உள்ளிட்ட 11 விமான தளங்களை தாக்கின. அனைத்து இலக்குகளும் துல்லியமாக அழிக்கப்பட்டதாகவும், ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் உள்நாட்டு ஆயுத அமைப்புகள் இதில் முக்கிய பங்கு வகித்தததாகவும் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.

ரஃபேல் விமானங்கள் குறித்த வதந்திகள்: ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக வெளியான செய்திக்கு பதிலளித்த பாரதி, “போர் சூழலில் இழப்புகள் இயல்பு. ஆனால், எங்கள் இலக்குகள் அடையப்பட்டன. அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்” என்று தெளிவுபடுத்தினார்.
கடற்படையின் மிரட்டல் தோரணை: வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கூறுகையில், “பஹல்காம் தாக்குதலுக்கு பின் 96 மணி நேரத்தில் வடக்கு அரேபிய கடலில் இந்திய கடற்படையின் கேரியர் போர் குழு, நீர்மூழ்கிகள், மற்றும் விமான சொத்துக்கள் முழு போர் தயார்நிலையில் நிறுத்தப்பட்டன. இது, பாகிஸ்தான் கடற்படையை தற்காப்பு நிலைக்கு தள்ளியது” எனத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு கடுமையான பதிலடி: “பஹல்காம் வரை பாவத்தின் குடம் நிரம்பிவிட்டது,” என்று குறிப்பிட்ட லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எதிரான எந்த அச்சுறுத்தல்களும் கடுமையான பதிலடியை சந்திக்கும் என எச்சரித்தார்.
இந்திய வீரர்களின் தியாகம்: ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த 5 இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. “எங்கள் வீரர்களின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும்,” என்று காய் உணர்ச்சிகரமாக
பாகிஸ்தானின் அத்து மீறல்கள்: மே 10 அன்று இரு நாடுகளின் DGMO-க்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்ட பின்னரும், பாகிஸ்தான் மே 8, 9, 10 தேதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்திய உள்கட்டமைப்புகளை தாக்கியது. இந்தியா இதற்கு வலுவாக பதிலடி கொடுத்து, பாகிஸ்தானின் ராணுவ தளங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்.