“தமிழக மாணவர்களின் கற்றல் தரம் தேசிய சராசரியை விட சிறப்பு!”

தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் தரம், தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக ‘ஸ்லாஸ்’ (SLAS – State Learning Achievement Survey) எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு அவ்வப்போது நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் முடிவுகளை அறிந்து மேம்படுத்துவதையும், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், மற்றும் ஆசிரியர் பயிற்சியில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சகமும் சில தனியார் அமைப்புகளும் நடத்திய ஆய்வில் தமிழக மாணவர்களின் கற்றல் நிலை சற்று பின்தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்ததால் விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து, “மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய, பிரத்யேக ஆய்வு நடத்தப்படும்” என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதற்காக, ஏற்கெனவே நடத்தப்படும் ‘ஸ்லாஸ்’ தேர்வை மாநில திட்டக் குழுவுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் உள்ள 45,924 அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் விரிவாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களில் 9,80,341 பேர் (66%) பிப்ரவரி 4 முதல் 6 வரை ஸ்லாஸ் தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மாநில கற்றல் அடைவுத் தேர்வு-2025’ அறிக்கையை, மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் மே 10 அன்று சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கே…
இந்த ஆய்வு தமிழகத்தில் முதல் முறையாக விரிவாக நடத்தப்பட்டது.
ஸ்லாஸ் தேர்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட்டது.
3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெற்றன.
தேர்வறை கண்காணிப்பாளர்களாக 38,760 கலை, அறிவியல், பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் பணியாற்றினர்.
3, 5-ம் வகுப்புகளுக்கு தலா 20 மாணவர்களும், 8-ம் வகுப்புக்கு 30 மாணவர்களும் ஆய்வில் பங்கேற்றனர்.
3-ம் வகுப்பு மாணவர்கள் தமிழில் 67%, ஆங்கிலத்தில் 69%, கணிதத்தில் 54%, சூழ்நிலையியலில் 76% அடைவு பெற்றனர்.
5-ம் வகுப்பு மாணவர்கள் தமிழில் 76%, ஆங்கிலத்தில் 51%, கணிதம் மற்றும் சூழ்நிலையியலில் 57% அடைவு பெற்றனர்.
8-ம் வகுப்பு மாணவர்கள் தமிழில் 52%, ஆங்கிலத்தில் 39%, கணிதத்தில் 38%, அறிவியலில் 37%, சமூக அறிவியலில் 54% அடைவு பெற்றனர்.
2021-ஆம் ஆண்டு மத்திய அரசின் நாஸ் ஆய்வுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் கற்றல் தரம் தேசிய சராசரியை விட உயர்ந்துள்ளது.
‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் உள்ளிட்ட முயற்சிகளால் 3, 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் தரம் சிறப்பாக உள்ளது.
8-ம் வகுப்பு கணிதத்தில் மாணவர்கள் சற்று பின்தங்கியுள்ளனர், இதற்கு கரோனா கால கற்றல் இடைவெளி முக்கிய காரணம்.
‘இல்லம் தேடிக் கல்வி’ உள்ளிட்ட திட்டங்கள் இருந்தபோதிலும், கற்றல் இடைவெளி முழுமையாக சரிசெய்யப்படவில்லை.
மாவட்ட அளவில் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது; கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை அடுத்த இடங்களில் உள்ளன.
கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் தரவரிசையில் பின்னடைவில் உள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றலை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த ஆய்வு முடிவுகள், தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால திட்டங்களுக்கு வழிகாட்டும் என்று ஜெயரஞ்சன் தெரிவித்தார்.