‘இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் பேரணி!’

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய படையினர் மே 6 அன்று நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்திய எல்லையோர மாநிலங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தின. ஆனால், அதை இந்திய ராணுவம் அவற்றை வானிலேயே இடைமறித்து தாக்கி, வீழ்த்தின. தொடர்ந்து பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதோடு, எதையும் சமாளிக்கும் திறனுடன் தயாராக உள்ளது.
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி
இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை மே 10 அன்று சென்னையில் பேரணி நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும்.
இந்த பேரணி, தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும். இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்