‘நீட்’ 2025: கடுமையான விதிகளும் கடினமான தேர்வும் – மாணவர்களின் மன உறுதியைக் குலைக்கிறதா?

மே 4 ஞாயிறு அன்று, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET) தேர்வை எழுதினர்.
தேசிய தேர்வு முகமை (NTA) அமல்படுத்திய கடுமையான உடை விதிகள், தீவிர பரிசோதனைகள் மற்றும் தேர்வின் கடினமான கேள்விகள் ‘நீட்’ தேர்வு முறையின் நியாயம் மற்றும் மாணவர்களின் மனநிலை குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளன.
கடுமையான உடை விதிகள்
NTA விதிமுறைகளின்படி, மாணவர்கள் வெளிர் நிற, அரைக்கை உடைகளை அணிய வேண்டும்; பெரிய பொத்தான்கள், ஜிப்பர்கள், உலோக அலங்காரங்கள் உள்ள ஆடைகள் தடைசெய்யப்பட்டன. செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன, ஷூ அனுமதிக்கப்படவில்லை. இந்த விதிகள் முறைகேடுகளைத் தடுக்க விதிக்கப்பட்டாலும், அவை மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தின. குறிப்பாக, மாணவிகளின் உடை விஷயத்தில் கடும் கெடுபிடிகள் காண்பிக்கப்பட்டன. இத்தகைய அனுபவங்கள், மாணவர்களிடையே கோபத்தையும் அவமான உணர்வையும் ஏற்படுத்தின.
திருமுருகன்பூண்டியில் நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததைக் காரணம் காட்டி தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதிக பட்டன்களால் அனுமதி மறுப்பு
சர்ச்சைக்குரிய சம்பவம், திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஏ.வி.பி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தில் காலை 11 மணி முதல் மாணவர்களை சோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். ஊத்துக்குளியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி, தேர்வு எழுத வந்தபோது, அவரது ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படங்களைச் சரிபார்த்த பின்னர் உள்ளே செல்ல முயன்றார். ஆனால் அலுவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அவர் அணிந்திருந்த சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால், உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

உடனே, பாதுகாப்பு பணியில் இருந்த மகளிர் காவலர் ஒருவர், அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு அழைத்துச் சென்று, வேறு ஆடை வாங்கிக் கொடுத்தார். புதிய உடை அணிந்த பின்னர் மீண்டும் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதேபோன்று இன்னொரு மையத்தில் பெண் ஒருவர், தனது தாலியைக் கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையத்துக்குள் சென்ற சம்பவமும் பேசுபொருளானது. கர்நாடகாவில், பிராமண வகுப்பைச் சேர்ந்த மாணவரிடம் அவர் அணிந்திருந்த பூ நூலை கழற்றச் சொன்ன சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடினமான கேள்விகள்
இந்த கெடுபிடிகள் ஒருபுறம் இருக்க, நீட் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளும் மாணவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, இயற்பியல் பாடத்துக்கான கேள்விகல் மிகவும் கடினமானதாக இருந்ததாக மாணவர்களும் பயிற்சி மைய ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
இயற்பியலில் அறிவுத்திறன் சோதிக்கும் கேள்விகள், கணக்கீட்டு அடிப்படையிலான பிரச்னைகள் மற்றும் பயன்பாட்டு கேள்விகள் அதிகம் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக, மின்னியல் மற்றும் இயக்கவியல் பிரிவுகளில் உள்ள கேள்விகள், நேரடியான பதில்களை விட ஆழமான புரிதலை கோரின. இது, மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் பயிற்சி வசதிகள் குறைவாக உள்ளவர்களுக்கு, பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
வேதியியல் பகுதி வினாக்களில் என்சிஇஆர்டி புத்தகங்களில் இருந்து நேரடியாக வினாக்கள் இடம்பெறாமல், வேதிச் சமன்பாடுகள் குழப்பமாக கடினமாக கேட்கப்பட்டிருந்தன. வேதிச் சமன்பாடுகளில் தனிமங்கள் மாற்றம் செய்யப்பட்டு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. நேரடி கேள்விகள் இல்லாததால் பதிலளிக்க சற்று சிரமமாக இருந்தது என மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

உயிரியியல் பகுதி இயற்பியல், வேதியியலை விட சற்று எளிதாக இருந்தாலும், கேள்விகள் நீளமானதாக இருந்தது. தாவரவியல் மற்றும் மரபியல் பிரிவுகளில் சில கேள்விகள் ஆழமான புரிதலை கோரின. இதனால் பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் உயிரியல் பகுதியை விரைவாக முடிக்க முடியவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
‘cut-off மதிப்பெண்கள் குறையும்’
கேள்விகளின் கடினத்தன்மையால், இந்த ஆண்டு நீட் தேர்ச்சி மதிப்பெண்கள் (cut-off) முந்தைய ஆண்டுகளை விட சற்று குறையலாம் என்று வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு உயர் மதிப்பெண்கள் தேவைப்படுவதால், இந்தக் கடினமான தேர்வு மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்படும் மன உறுதி
நீட் தேர்வு, மருத்துவக் கல்வியில் நியாயமான தேர்வு முறையை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. ஆனால், முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியில், மாணவர்களின் தனி மரியாதையும் மன உறுதியும் பாதிக்கப்படுவது கவலை அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில், நீட் தேர்வுக்கு எதிரான உணர்வுகள் ஏற்கனவே வலுவாக உள்ள நிலையில், இத்தகைய சம்பவங்கள் மாணவர்களிடையே அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளன.

எனவே தேசிய தேர்வு முகமை (NTA), தேர்வு மைய ஊழியர்களுக்கு உணர்வுபூர்வமான பயிற்சி அளிப்பது, விதிமுறைகளை முன்கூட்டியே தெளிவாக விளக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவை, தேர்வின் நேர்மையை பாதுகாக்கும் அதே வேளையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்கிறார்கள் கல்வியாளர்கள்!
மாணவர்களின் கனவுகளுக்கு மரியாதை அளிக்கும், நியாயமான மற்றும் மனிதநேயமிக்க தேர்வு முறை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!