எலான் மஸ்க் பெயரில் கிரிப்டோ மோசடி: தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!

எலான் மஸ்க் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் கிரிப்டோ நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கிரிப்டோ நாணய முதலீடுகளை ஆதரிப்பதாகக் கூறும் போலி விளம்பர வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்த மோசடிகள், மக்களை ஏமாற்றி பணத்தை இழக்கச் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன.
இந்த வீடியோக்கள், எலான் மஸ்க் அல்லது அவரது தந்தை எரோல் மஸ்க் அளித்த பேட்டிகளை AI மற்றும் எடிட்டிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தவறாகத் திருத்தி உருவாக்கப்பட்டவை. இவை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, இதுவரை 26 போலி இன்ஸ்டாகிராம் முகவரிகளையும், 14 போலி இணையதளங்களையும் கண்டறிந்து, அவற்றை முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
எலான் மஸ்க் எந்தவொரு கிரிப்டோ முதலீட்டு செயலி அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை என்பதை பொதுமக்களுக்கு தெளிவாக அறிவித்துள்ளனர்.
இத்தகைய மோசடிகளை அடையாளம் காண சில முக்கிய அறிகுறிகளை சைபர் கிரைம் பிரிவு பட்டியலிட்டுள்ளது. அதிக இலாபம் உறுதியளிக்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் நம்பகமற்றவை. பிரபல நபர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். மூலம் தெரியாத இணையதளங்கள் அல்லது செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது. இவை மோசடியின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.
சைபர் கிரைம் பிரிவின் அறிவுரைகள்
தகவல்களை அரசு அல்லது நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கவும். அறியப்படாத இணையதளங்களில் தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கிக் கணக்கு தகவல்களைப் பகிர வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட கிரிப்டோ பரிமாற்றங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
மோசடிக்கு பலியானவர்கள் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம்.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டறிந்தாலும், இந்த வழிமுறைகளைப் பின்பற்றி புகார் அளிக்கலாம். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு, இந்த மோசடிகளுக்கு எதிராக தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, தங்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.