“மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் NEP-CBSE”- எச்சரிக்கும் அமைச்சர்!

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்படுத்தப்படும் புதிய விதிமுறைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
3, 5, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டும் என்ற இந்தக் கொள்கை, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்தக் கொள்கையை எதிர்த்து பெற்றோர்கள் கேள்வி எழுப்ப வேண்டும், கையெழுத்திட மறுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்தப் புதிய விதி, கல்வி உரிமைச் சட்டத்திற்கு (RTE) முரணாகவும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“புதிய விதி சட்டவிரோதமானது”
“NEP-யின் இந்த அவசர அமலாக்கம், கொரோனா காலத்தில் முறையான ஆலோசனைகள் இன்றி திணிக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை, வரைவாக இருந்தபோதே, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை எதிர்த்தார். ஆனால், மத்திய அரசு அவசரமாக இதை அமல்படுத்தியது. 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தோல்வி என்ற பயத்தை ஏற்படுத்துவது, அவர்களின் கல்வி ஆர்வத்தை அழித்து, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும். கல்வி உரிமைச் சட்டப்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடையச் செய்யக் கூடாது என்ற விதி இருக்கும்போது, இந்தப் புதிய விதி சட்டவிரோதமானது” என்றும் அவர் கூறினார்.
மேலும், “இந்தக் கொள்கையால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிறு வயதில் குழந்தைகள் இத்தகைய அழுத்தத்தை எப்படி தாங்குவார்கள்? இது திமுக-வினரின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரின் குழந்தைகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்களுக்காகவே நாங்கள் பேசுகிறோம்” என்று கூறிய அவர்,”மாணவர்களை இளம் வயதிலேயே தோல்வியாளர்களாக முத்திரை குத்துவது, அவர்களை கல்வியிலிருந்து விலக்கி, சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று அச்சம் தெரிவித்தார்.

“மத்திய அரசின் இந்தக் கொள்கை, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் முயற்சியாகும். ஒவ்வொரு மாநிலமும் அதன் தேவைகளை அறியும். ஆனால், மத்திய அரசு ‘பெரியண்ணன்’ மனப்பான்மையுடன் தனது விருப்பங்களை திணிக்கிறது” என்றார்.
“தேசவிரோதிகளை தியாகிகளாக்குகிறார்கள்”
மேலும், ” தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) மூலம் வரலாற்றை திரித்து, உண்மைகளை மறைப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், “நாம் தேசவிரோதிகளாக படித்தவர்களை அவர்கள் தியாகிகளாக மாற்றுகிறார்கள். NCERT-ஐ அனுமதித்தால், மாநில கல்வி ஆராய்ச்சி கவுன்சில் (SCERT) அழிந்துவிடும்” என்று எச்சரித்தார்.
“இந்த அறிவிப்பு வெளியானவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றமடைந்து, இதுகுறித்து என்னிடம் ஆலோசித்தார். மாணவர்களே நாளைய எதிர்காலம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். எனவே, உங்கள் பிள்ளைகள் தோல்வி’ என்று கையெழுத்திடச் சொன்னால், எதிலும் கையெழுத்திடாதீர்கள். எதிர்த்து கேள்வி கேளுங்கள்!” என்று பெற்றோர்களை வலியுறுத்தினார். இந்தக் கொள்கையை ஆதரிக்கும் எந்த ஆவணத்திலும் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

NEP-யின் இந்த விதிமுறை, கல்வியை அணுகுவதற்கான மாணவர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியாகவே தமிழ்நாடு அரசு பார்க்கிறது. அந்த வகையில், மாணவர்களின் மன உறுதியையும், கல்வி ஆர்வத்தையும் பாதுகாக்க, தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.