சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்: மோடி அரசின் மாஸ்டர் பிளானா?

வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமையன்று நடந்த மத்திய அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே சமயம், பீகார் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ள சூழ்நிலையில் வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு, “உண்மையிலேயே சமூக நீதிக்கான முயற்சியா அல்லது மோடி அரசின் அரசியல் தந்திரமா?” என்ற சந்தேக கண்ணோட்டமும் எதிர்க்கட்சிகள் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பு: ஏன் இப்போது?
தமிழ்நாடு, பீகார், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை வலுத்து வந்தது. தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-ல் பிரதமருக்கு கடிதம் எழுதி, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை ஒருங்கிணைக்க வலியுறுத்தினார்.
முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு, 2023 அக்டோபரில் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தியது. அதில், 84% மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி பீகார் அரசில் கூட்டணி பங்காளியாக இருந்தது.
இன்னொருபுறம் ராகுல் காந்தி, 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கவும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், மோடி அரசு இதுவரை இந்தக் கோரிக்கைகளை “பிரிவினைவாதம்” என விமர்சித்து தவிர்த்து வந்தது. இப்போது திடீரென இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வாதம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “பல மாநிலங்களில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்புகள் அறிவியல் பூர்வமற்றவை. அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டவை. காங்கிரஸும், இந்தியா கூட்டணி கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தின” என்று குற்றம் சாட்டினார்.
” சில மாநிலங்கள் சாதி ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்தன, ஆனால் மற்றவை அரசியல் நோக்கத்துடன் வெளிப்படையற்ற முறையில் நடத்தின. இவை சமூகத்தில் சந்தேகங்களை உருவாக்கின. சமூக இணக்கத்தைப் பாதுகாக்க, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.காங்கிரஸ் அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தன. 2010-ல் மன்மோகன் சிங் இதை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்றார். அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பல கட்சிகள் இதை ஆதரித்தன; ஆனால் காங்கிரஸ் ஆய்வு நடத்த முடிவு செய்தது ” என்று வைஷ்ணவ் மேலும் கூறினார்.
அவரது இந்த வாதங்கள், மத்திய அரசு சமூக நீதிக்காக இந்த முடிவை எடுத்ததாகக் காட்ட முயல்கின்றன. ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருக்கலாம் என்பதே எதிர்க்கட்சிகளின் சந்தேகம்.
அரசியல் மாஸ்டர் பிளானா?
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஜேடியு (பீகார்) மற்றும் தெலுங்கு தேசம் (ஆந்திரா) சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து வந்தன. ஆர்எஸ்எஸ் கூட, இது அரசியல் நோக்கமின்றி நடத்தப்பட வேண்டும் என ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாஜக இதுவரை இந்தக் கோரிக்கையை எதிர்த்து வந்தது.

இந்த நிலையில், “மத்திய அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவு ஒரு அரசியல் தந்திரமாக இருக்கலாம். குறிப்பாக, பீகார் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டே மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம். காங்கிரஸின் நீண்டகால கோரிக்கையை பாஜக தனதாக்கி, எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்த முயலலாம். மேலும், இந்த அறிவிப்பு, வரவிருக்கும் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியாகவும் இருக்கலாம்” என்கிறார்கள் சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பேச்சாளர்கள்.
சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்
சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு, சமூக நலத் திட்டங்கள் மற்றும் கொள்கை வடிவமைப்புக்கு அடித்தளமாக அமையலாம். ஆனால், இதன் தரவு புழக்கத்தில் வெளிப்படைத்தன்மை, அறிவியல் தன்மை மற்றும் அரசியல் தலையீடு இல்லாமை உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில், இந்த கணக்கெடுப்பு 69% இடஒதுக்கீட்டை மேலும் வலுப்படுத்த உதவலாம். ஆனால் சமூகப் பிளவுகளைத் தூண்டாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவு, உண்மையில் சமூக நீதிக்கு வழிவகுக்குமா அல்லது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா என்பதை எதிர்காலம் தான் சொல்லும்!