அட்சய திருதியையில் தங்கம்: செலவா, சேமிப்பா, வணிக உத்தியா?

அட்சய திருதியை… செல்வ செழிப்புக்கும் மங்களகரமான புதிய தொடக்கத்துக்குமான நன்னாளாக கருதப்படும் நாள் என்பதை விட இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் நகைக்கடைகளில் ஆரவாரமாகக் கூடும் நாள் என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வீடுகளில் ஒலித்த நகைக் கடைகளின் தொலைக்காட்சி விளம்பரங்கள், இந்த முறையும் “அட்சய திருதியை அன்று குண்டு மணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும்” என மக்களைத் தயார்படுத்தி விட்டன. இன்னொரு புறம் ஜோதிடர்களும் தங்களது பங்குக்கு, ” அட்சய திருதியை அன்று எந்த ராசிக்காரர் எந்த நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும்” என்றெல்லாம் ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கியே தீருவது என்பது மோகமா, செலவா, சேமிப்பா, அல்லது நகை வணிகர்களின் சாமர்த்தியமான தந்திரமா? தங்கத்தைச் சுற்றிய மக்களின் எண்ணங்கள், வணிக உத்திகள், மற்றும் அவசர காலத்தில் தங்கத்தின் மதிப்பு குறித்து எளிமையாகப் பார்ப்போம்…
தங்கத்துக்கு மவுஸு ஏன்?
“அட்சய திருதியையில் பொன் வாங்கினால் வாழ்க்கை செழிக்கும்” என்ற நம்பிக்கை தமிழர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது. கிராமங்களில் குண்டுமணி தங்கம் வாங்குவோர் முதல், நகரங்களில் லட்சக்கணக்கில் நகைகளை வாங்குவோர் வரை, இந்த நாளை பொன்னுக்கு நடத்தப்படும்‘மஞ்சள் நீராட்டு விழா’வாகவே கருதுகின்றனர். ஆனால், இந்த ஆர்வத்திற்கு பின்னால் பொருளாதார யதார்த்தமும் உள்ளது. பொன், பணவீக்கத்தை எதிர்கொள்ளும் பாதுகாப்பான முதலீடு. அவசர காலத்தில், ‘நகையை அடமானம் வைத்து’ பணம் புரட்டுவது தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு ஒரு ‘எமர்ஜென்சி ATM’.

2020 கொரோனா தொற்றுநோய் காலத்தில், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 32% குடும்பங்கள் உணவு, மின்சாரக் கட்டணம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, 2020-ல் தங்கத்தின் விலை $2,000 அவுன்ஸை நெருங்கியதால், குடும்பங்கள் அதிக கடன்களைப் பெற முடிந்தது.
2023-24 ல் நகை அடமானம்
கொரோனாக்குப் பிந்தைய காலத்தில், தமிழ்நாட்டில் நகை அடமான கடன்களின் தேவை தொடர்ந்து உயர்ந்துள்ளது. 2023-24 ல், தென்னிந்தியாவில் தங்கக் கடன்களின் தேவை 20% உயர்ந்ததாக Muthoot Finance, Manappuram போன்ற NBFC அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது, தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு தங்கம் ஒரு நம்பகமான நிதி ஆதாரமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
வங்கிகள் மற்றும் NBFC-கள் 7-15% வட்டியில் கடன் வழங்கினாலும், கிராமப்புறங்களில் 25-50% வட்டியுடன் உள்ளூர் அடமானக்காரர்களிடம் 65% கடன்கள் பெறப்பட்டன. 2021 ஆய்வு ஒன்று, பெண்கள் மைக்ரோஃபைனான்ஸ் கடன்களைத் திருப்பிச் செலுத்த நகைகளை அடமானம் வைத்ததாகத் தெரிவிக்கிறது. இது தமிழ்நாட்டில் தங்கக் கடன்களின் பரவலான பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
வணிகர்களின் வியூகம்
நகைக் கடைகள் அட்சய திருதியையை ஒரு விற்பனைக் களியாட்டமாக மாற்றுகின்றன. “அட்சய திருதியை ஸ்பெஷல்: 10% தள்ளுபடி, இலவச மேக்கிங் சார்ஜ்!” என்ற விளம்பரங்கள் ஜனவரி முதலே சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தோன்றுகின்றன. 2024-ல், தமிழ்நாட்டில் இந்த நாளில் ரூ.14,000 கோடி முதல் ரூ.15,000 கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையாகின என்று நகை வணிக சங்கம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு, EMI தவணைகள், ‘இப்போது வாங்கி பிறகு செலுத்து’ திட்டங்கள், புதிய டிசைன்கள் ஆகியவற்றுடன் வணிகர்கள் மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கின்றனர்.

“பொன் வாங்குவது முதலீடு” என்று விளம்பரப்படுத்தி, பொருளாதார பாதுகாப்பு குறித்த மக்களின் அச்சத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், “இந்த உத்திகள் பலரை தேவையற்ற கடன்களுக்கு இட்டுச் செல்கின்றனவா?” என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
சேமிப்பா, செலவா?
பொன் வாங்குவது சேமிப்பு என்றாலும், பலருக்கு இது பெரும் செலவாக மாறுகிறது. ஒரு மத்தியதர குடும்பம் அட்சய திருதியையில் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை செலவிடுகிறது. இதற்காக சேமிப்பை உடைப்பது, கடன் வாங்குவது ஆகியவை பொதுவாகின்றன. மக்களிடையே அவசரத் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைக்கும் போக்கு தொடர்கிறது. ஆனால், அடமானத்தில் நகையை வைக்கும்போது வட்டி, மதிப்பு இழப்பு ஆகியவை பலரால் கவனிக்கப்படுவதில்லை. உலகளவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம், இந்த முதலீட்டின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இன்றைய நிலையில் தங்க விலை ஒரு கிராமுக்கு ரூ.8,980
-ஐ தாண்டியுள்ளது. இது மக்களின் செலவு முடிவுகளை மேலும் சிக்கலாக்குகிறது.
மக்களின் மனநிலை
அட்சய திருதியையில் பொன் வாங்குவது, பாரம்பரியத்தின் அடையாளமாகவும், பொருளாதார நம்பிக்கையாகவும் உள்ளது. 2020 கொரோனா காலத்தில் நகைகள் பல குடும்பங்களுக்கு உயிர்க்காப்பு மருந்தாக இருந்தது. ஆனால், வணிகர்களின் விற்பனை உத்திகளை உணர்ந்து, திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். “பொன் வாங்குவது சேமிப்பு, ஆனால் தேவைக்கு மேல் வாங்குவது கடன்,” என்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகர்கள்.

எனவே, பொன்னை வாங்குவதற்கு முன், உங்கள் பாக்கெட்டையும், எதிர்காலத்தையும் எண்ணிப்பாருங்கள். தங்கம் எப்போதுமே நம்பிக்கையின் அடையாளம் தான். ஆனால், பொன்னின் பின்னால் உள்ள வணிக உத்திகளை புரிந்து, பொறுப்புடன் முடிவெடுப்பது தான் உண்மையான செழிப்பு!