“2026 தேர்தலிலும் மீண்டும் திமுக ஆட்சி” – ஸ்டாலினின் தன்னம்பிக்கையும் திராவிட மாடல் 2.0 அறிவிப்பும்!

மிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று தமிழக சட்டப்பேரவையில் உள்துறை தொடர்பான விவாதத்தை முடித்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இதுவரை நீங்கள் பார்த்தது திராவிட மாடல் ஆட்சியின் Part 1 தான். 2026-ல் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடங்குகிறது” என்று கூறி, அடுத்த தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதிபட தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், “எங்கள் ஆட்சி மே 2025-ல் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஆட்சியும் திமுகவால் அமையும். மக்கள் நலனுக்காக உழைக்கும் திமுகவை மக்கள் மறக்க மாட்டார்கள். 2026-ல் ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இதுவரை நீங்கள் கண்டது திராவிட மாடல் ஆட்சி பகுதி 1. 2026-ல் திராவிட மாடல் 2.0 தொடங்கும். மேலும் பல சாதனைகளைப் படைப்போம்.

கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டில் இருந்து தமிழகத்தை மீட்டு எல்லா துறைகளிலும் நம் மாநிலத்தைத் தலைநிமிரச் செய்துள்ளேன். இது சாதாரண சாதனை அல்ல. கடும் உழைப்பால் கிடைத்த சாதனை. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை பார்க்காத சாதனையை தமிழகம் படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளைப் படைத்துள்ளது.

2024- 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் 9.6% பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை இந்த வளர்ச்சியை தமிழகம் கண்டதில்லை. இதனை நான் சொல்லவில்லை, எப்போதும், எல்லாவிதத்திலும் தமிழகத்தை ஒடுக்கும் ஒன்றிய அரசே சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம். தேசிய சராசரியே ரூ.2.06 லட்சம் தான்.

மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியால் அந்தக் குறியீட்டில் நாம் தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் இருப்போர் 1.4% தான். தேசிய அளவில் 11.2% பேர் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஐ.நா. அமைப்பின் விருதைப் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிகமான மருத்துவ சீட் உள்ள மாநிலமும் தமிழகம் தான்.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தியில் 4-வது இடத்தில் உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளோம்.

“இது ஒரு தத்துவத்தின் ஆட்சி”

இது ஒரு கட்சியின் அரசு அல்ல. ஒரு கொள்கையின் அரசு. அதனால் தான் அண்ணா அரசு, கலைஞர் அரசு, எம்ஜிஆர் அரசு என்ற வரிசையில் ஸ்டாலின் அரசு என்று சொல்லாமல் திராவிட மாடல் அரசு என்று நான் குறிப்பிட்டேன். ஒரு தனி மனிதனின் ஆட்சி அல்ல. இது ஒரு தத்துவத்தின் ஆட்சி.

தமிழகம் இந்தச் சாதனைகளை எல்லாம் சாதரணமாக செய்துவிடவில்லை. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள் இவற்றிற்கெல்லாம் இடையில் மாட்டிக் கொண்ட மனிதனைப் போல் ஒரு பக்கம் மத்திய அரசு, மறு பக்கம் ஆளுநர், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று எல்லா தடைகளையும் கடந்து சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை. என்னைப் பொறுத்தவரை கொள்கையும், இயக்கமும் தான் முன்னிலை பெற வேண்டும். வலிமை பெற வேண்டும்.

சட்டம் – ஒழுங்கு சீராக இருப்பதால் தான் தமிழகத்தில் கலவரங்கள் இல்லை. கலவரங்களைத் தூண்ட யாரேனும் நினைத்தாலும் மக்களே அதை முறியடித்துவிடுவார்கள். மொத்தத்தில் சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்களின் ஆசையில் மண் தான் விழுந்திருக்கிறது.

குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஏதாவது ஒரு சில இடத்தில் கவனக்குறைவால் சில தவறுகள் நடந்தால், அதை சுட்டிக்காட்டும் பட்சத்தில் சரி செய்து கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது மணிப்பூர் அல்ல, இது காஷ்மீர் அல்ல, உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கே நடக்கவில்லை. இது தமிழ்நாடு. மறந்துவிடாதீர்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

新?. Australian open 2025 : injured djokovic booed off after quitting semi final. 文?.