மறுமலர்ச்சி காணும் தமிழக சுற்றுலாத்தலங்கள்… இரவிலும் ஒளிரப்போகும் திருவள்ளுவர் சிலை!
தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதன் பயனாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதனால், தமிழக சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத்தலமாக முன்னேறுகிறது.
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
கொரோனாவுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023 முதல் ஆகஸ்ட் மாதம் முடிய 8 மாதங்களில் 7,60,545 ஆக உயர்ந்துள்ளது.
இதே போன்று 2021 ஆம் ஆண்டு 1,53,36,719 ஆக இருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 2022 ல் 21,85,84,846 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டான 2023 ல் ஆகஸ்ட் மாதம் முடிய 8 மாதங்களில் இந்த எண்ணிக்கை 19 கோடியே 11 லட்சத்து 87,624 ஆக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேம்படுத்தப்படும் சுற்றுலாத் தலங்கள்
இந்த நிலையில், தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்காக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகளும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில், முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம் ரூ.23.60 கோடி மதிப்பிலான புனரமைக்கும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தினை ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் 200 நபர்கள் அமரும் வகையிலான இரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணியும் விரைந்து நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான ஒளிரும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொல்லிமலையை பல்வேறு வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டிலும், உதகை படகு குழாமில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் மரவீடுகள், மரத்தின் மேல் வீடுகள், குடில் வீடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஜவ்வாது மலையில் ரூ.2.91 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஏலகிரி மலையில் ரூ. 2.98 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும்,
திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் ஏரியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா, திறந்தவெளி முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலத்தை ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மற்றும் கடற்கரை நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத் துறைகளில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத் துறை மேம்பாட்டுப் பணிகளும், தூத்துக்குடி ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் உள்ளன.
பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் பணிகள், புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரைப் பகுதியில் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் நீர் விலைகள், கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்துவிட்டால், சுற்றுலாத்துறை மேலும் புத்துயிர் பெறும். இதனால், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலாக தமிழ்நாடு மாறும்!