பேருந்து சேவையை தொடங்கி வைத்த மாணவன்… கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சிக்கு, சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்றிருந்தார்.
அப்போது அப்பள்ளி மாணவர் அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனைக் கருத்தில் கொண்டு அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார் தங்கம் தென்னரசு. இதனையடுத்து, காரியாபட்டியில் இருந்து ஆத்திகுளம் வழியாக திருச்சுழி வரை (காலை 8.10, மாலை 4.15) செல்லும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், அந்த புதிய வழித்தட பேருந்து சேவையை அமைச்சர் தங்கம் தென்னரசு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதனை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தங்கம் தென்னரசு, “இப்பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். இந்த பிஞ்சுக் குழந்தைகளின் கனவு மெய்ப்பட திராவிட மாடல் அரசு எத்தனை உதவிகளையும் செய்யத் தாமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.