கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தொடர்ந்து எதிர்ப்பு… காரணங்கள் என்ன?

“பாஜக உடன் கூட்டணி மட்டும் தான்; கூட்டணி ஆட்சி கிடையாது” என அதிமுக தரப்பில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் கருத்து அவ்விரு கட்சிகள் இடையேயான கூட்டணி 2026 தேர்தல் வரை நீடிக்குமா என்ற கேள்வியையும் விவாதத்தையும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக கடந்த 10ம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித்ஷா, “அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். “தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்” என அப்போது தெரிவித்தார்.
இந்த நிலையில், “பாஜகவுடன் கூட்டணிதான், கூட்டணி ஆட்சி கிடையாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், “கூட்டணியை பற்றி பேசியது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். எனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து, அந்த நேரத்தில், அமித் ஷா முடிவெடுப்பார்” எனக் கூறினார். அவரது இந்த பதில், “கூட்டணி ஆட்சியா இல்லையா என்பது குறித்து பாஜக-வின் முடிவே இறுதியானது” என்பதை சூசகமாக வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ” 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தனியாகத்தான் ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததும் கிடையாது. இனிமேல் வரப்போவதும் கிடையாது. பாஜகவுடன் கூட்டணிதான், கூட்டணி ஆட்சி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஒருபோதும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்” என்றார்.
கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு ஏன்?
அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மேலும் 2026 தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஓராண்டு உள்ளது. இந்த நிலையில், கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தரப்பில் இப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன்..? அதிமுக வட்டாரத்தில் சொல்லப்படுவது என்ன?
” பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைந்தால், அதிமுகவின் ஆதிக்கம் குறையும் என்ற அச்சம் கட்சிக்குள் உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்த நிதிஷ் குமார் (பீகார்), சிவசேனா (மகாராஷ்டிரா), ஜேடி(எஸ்) (கர்நாடகா) போன்ற கட்சிகளின் நிலைமை எங்களுக்கு ஒரு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் உள்ளது” என்கிறார்கள் அதிமுகவின் மூத்த தலைவர்கள்.
“இந்த கூட்டணி, தேர்தல் வெற்றிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதிமுக, தெற்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் பாஜகவின் ஆதரவை எதிர்பார்க்கிறது. அதேவேளை பாஜக கோவை, சென்னை (தி.நகர்), கன்னியாகுமரி போன்ற நகர்ப்புற தொகுதிகளில் நிலைமை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறது. ஆனால், ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு கொடுப்பது அதிமுகவின் உள்ளூர் செல்வாக்கை பலவீனப்படுத்தும் என்பதால், இபிஎஸ் இதை தவிர்க்கிறார்.
அதிமுகவும் பாஜகவும் வக்ஃபு மசோதா, மொழிக் கொள்கை, மத்திய-மாநில உறவுகள், மறுவரையறை, நீட் போன்ற பல விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளன. இந்த கூட்டணி தற்காலிகமானது மற்றும் பொதுவான எதிரியான திமுகவை எதிர்க்கவே உருவாக்கப்பட்டது” என்றும் கூறும் அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், ” இந்த கூட்டணி நீண்டகாலத்தில் கட்சியின் சுயத்தன்மையையும் சுதந்திரமான செயல்பாடுகளையும் பாதிக்கும் ” என்று அச்சம் தெரிவிக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணி ஆட்சி குறித்து அமித் ஷாவே முடிவு செய்வார் என்று கூறியது, பாஜகவின் மேலாதிக்க நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அதிமுக கருதுகிறது. இது தான், கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

” அதிமுக-பாஜக கூட்டணி, முந்தைய தேர்தல்களில் இரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்கு சதவீதத்தை மனதில் கொண்டு, 2026 தேர்தலில் திமுக-வை வீழ்த்துவதற்கான சில கூட்டல் கழித்தல் கணக்குகள் அடிப்படையில் உருவாகியுள்ளது. மேலும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பிலும் பாஜக கூட்டணிக்கு கணிசமான எதிர்ப்பு நிலவுகிறது. கூட்டணி என்பது பரஸ்பரம் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக ஒரு கட்சியின் மேலாதிக்கமும், நிர்பந்தமும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே எப்படி இணக்கமான உணர்வை ஏற்படுத்தி, தேர்தலில் வெற்றியைத் தேடித்தரும்.
இதனால், இரு கட்சிகளுக்கிடையேயான ‘கெமிஸ்ட்ரி’ அல்லது இணைந்து செயல்படும் எண்ணம் பலவீனமாக இருப்பதால், இந்த கூட்டணி நீண்டகாலம் நீடிக்குமா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகவே உள்ளது” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஆனால், ” யாரை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்பது அமித் ஷாவுக்கு நன்கு தெரியும். அந்த அதிரடியை அவர் காட்டினால் அதிமுக எங்கள் வழிக்கு வந்து தான் ஆக வேண்டும். எனவே, ‘கூட்டணி ஆட்சி கிடையாது’ என அதிமுக தலைவர்கள் தற்போது சொல்லி வருவது அக்கட்சியின் தொண்டர்களை சமாதானப்படுத்துவதற்காக வேண்டுமானால் இருக்கலாம். முடிவு நாங்கள் தீர்மானிப்பது தான்” என்கிறது கமலாலய வட்டாரம்.
எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் 2026 தேர்தல் தான் பதிலளிக்கும்!