அதிமுக-பாஜக கூட்டணி குழப்பமும் உஷார் எடப்பாடியும்!

தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள், இரு கட்சிகளின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முரண்பட்ட கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
கடந்த ஏப்ரல் 11 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “பாஜக மற்றும் அதிமுக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் இபிஎஸ் தலைமையிலும் இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தெளிவாகக் கூறினார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சி இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. ‘டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி’ என்று அமித்ஷா கூறியிருக்கிறார். நீங்களாகவே ஏதாவது வார்த்தைகளைப் பிடுங்கி விறுவிறுப்பான செய்தியைத் தேடுகிறீர்கள். உங்கள் விஞ்ஞான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
கூட்டணி அமைந்து ஒரு வார காலத்துக்குள்ளாகவே இவ்வாறு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருப்பது, கூட்டணியின் அடிப்படை இலக்கு குறித்து இரு கட்சிகளிடையே ஒருமித்த புரிதல் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பாஜக கூட்டணியும் அதிமுகவினரின் மனநிலையும்
முதலில் இந்த கூட்டணிக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டத்திலேயே முழு அளவில் ஆதரவில்லை. அண்மையில் கூட, அதிமுக என்ற மாபெரும் கட்சி உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக, திருப்பூர் அதிமுக கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கண் கலங்கி பேசியது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பையும் பாஜக வட்டாரத்தில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
திருப்பூர் மாநகராட்சி 44 ஆவது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் பேசும்போது, “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தால், அதிமுக- பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இல்லையென்றால், கட்சி 4 மற்றும் 5 ஆக உடையும் சூழலில் தான், கட்சியின் பொதுச் செயலாளர் திடமான கூட்டணியை உருவாக்க முன் வந்துள்ளார். என் உயிர் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு துணை நிற்பேன்.

இங்குள்ள மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் பேசி, இங்குள்ள நிலவரத்தை எடுத்துரைக்க வேண்டும். மேலும் “அதிமுக முஸ்லிம்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என அறிக்கை வெளியிட வேண்டும்” என்றபடி பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, “இது என் ஆதங்கம். இதனை சொல்லாவிட்டால், கிளை செயலாளர்கள் பணி செய்யமாட்டார்கள்” என்றார்.
இது ஒரு உதாரணம் தான். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இதுபோன்ற அதிருப்தி காணப்படுவது” உண்மை தான் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். குறிப்பாக, பாஜகவின் தேசிய அரசியல் மற்றும் மதச்சார்பு தன்மை குறித்து பேசும் சில மூத்த அதிமுக தலைவர்கள், ” இந்தக் கூட்டணி அதிமுகவின் மதச்சார்பற்ற பிம்பத்தை பாதிக்கும்” என்று அஞ்சுகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த அதிமுக நிர்வாகி கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைப்பது தேர்தல் வெற்றிக்கு உதவலாம், ஆனால், அது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்த வாய்ப்புள்ளது” என்கின்றனர். மேலும், திராவிட இயக்கத்தின் வேர்களைக் கொண்ட அதிமுகவின் அடையாளத்தை இந்தக் கூட்டணி மங்கச் செய்யும் என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.
தென் மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி தேவைதான். ஆனால், அது எங்கள் கட்சியின் முதன்மைத்தன்மையை இழக்காமல் இருக்க வேண்டும். இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைப்பது மட்டுமே ஏற்கத்தக்கது” என்றார்.
உஷார் எடப்பாடி
இந்த நிலையில், இது குறித்த தகவல்கள் எடப்பாடிக்கும் எட்டியதைத் தொடர்ந்து தான், தனது தலைமையில் தான் ஆட்சி என்பதை அதிமுகவினருக்கு மட்டுமல்லாது, பாஜக-வுக்கும் சூசகமாக வெளிப்படுத்தும் விதமாகவே அவர் இன்றைய தனது பேட்டியில் ‘ டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி” என உஷாராக கூறியதாக தெரிகிறது.
மேலும் அதிமுக-வில் தனது பிடியை வலுப்படுத்தும் விதமாகவும், கட்சியினரை சமாதானப்படுத்தும் உத்தியாகவும் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதனிடையே வரும் மே 2 அன்று நடைபெறவிருக்கும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், நிர்வாகிகள் மட்டத்தில் நிலவும் கூட்டணி குழப்பங்களுக்கு தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கூட்டணியின் எதிர்காலம் மற்றும் அதிமுகவின் உத்திகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது, இந்தக் கூட்டணி தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இபிஎஸ் மற்றும் பாஜக தலைமையின் ஒருங்கிணைப்பைப் பொறுத்தே அமையும்.
இதற்கு முன்பு 2019 மற்றும் 2021 தேர்தல்களில் பாஜகவுடன் இணைந்து அதிமுக பயணித்தபோது, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு முன்பே உட்கட்சி மோதல்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பு ஆகியவை தோல்விக்கு வழிவகுத்தன. இந்த முறை, ஆரம்பத்திலேயே ஏற்பட்டிருக்கும் குழப்பம், கூட்டணியின் உறுதித்தன்மையை சோதிக்கிறது. இந்த நிலையில், எடப்பாடியால் தனது தலைமையை நிலைநிறுத்தி, கட்சியின் உட்கட்சி அதிருப்திகளைச் சமாளித்து, பாஜகவுடனான கூட்டணியை வெற்றிகரமாக நகர்த்தி செல்ல முடியுமா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.