குலசேகரப்பட்டினம்: தமிழ்நாட்டின் வருங்கால பெருமிதம்!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைய இருப்பதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாவதோடு, பல்வேறு துறைகளில் முதலீடுகளும் ஈர்க்கப்படலாம் என்பதால், இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குலசேகரப்பட்டினம் தேர்வானது ஏன்?
தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாட் ஏவுதளத்தில் இருந்துதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ செயற்கை கோள்களை ஏவிவருகிறது. ‘இஸ்ரோ’ மிகக்குறைந்த கட்டணத்திலேயே செயற்கை கோள்களை விண்ணில் ஏவிவருவதால், பல நாடுகளும் தங்களது செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோவை தேடி வருகின்றன. இதனால் இஸ்ரோ, பல்வேறு நாடுகளின் செயற்கை கோள்களையும் வணிக ரீதியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துகிறது.
அதிகரிக்கும் இந்த தேவைகள் காரணமாக இரண்டாவது ஏவுதளம் அமைக்க வேண்டியது அவசியமானதாகி விட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்தபோது, நிலவியல் ரீதியாக ஸ்ரீஹரிகோட்டாவைவிட சிறந்த இடமாக குலசேகரன்பட்டினம் கண்டறியப்பட்டது. நிலக்கோட்டுக்கு 13.72 டிகிரி தொலைவில் ஸ்ரீஹரிகோட்டா இருக்கிறது. ஆனால், குலசேகரன்பட்டினம் 8.364 டிகிரி தொலைவில்தான் இருக்கிறது. இதனால், குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும்போது எரிபொருள் மிச்சமாகும். புவி உந்துவிசையும் அதிகமாக இருக்கும். இதனால் எரிபொருள் செலவாவது குறைவாதுடன், ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கைகோளின் எடையையும் அதிகரிக்க முடியும். இதன் காரணமாகவே குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது மற்றும் தமிழ்நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளம் என்ற அந்தஸ்த்தை குலசேகரன்பட்டினம் பெறுகிறது.
வேலைவாய்ப்பு பயன்கள்
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாவதோடு, பல்வேறு துறைகளில் முதலீடுகளும் ஈர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் கூறுகையில், “குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் அந்த பகுதியில் உதிரி பாகங்களை தயாரிக்கும் பல தொழில் நிறுவனங்கள் புதிதாக வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால், இந்த பகுதி பெரிய வளர்ச்சி அடையும்.
விண்வெளி துறையில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் விண்ணில் செயற்கை கோள்களை செலுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. இதுபோன்ற
நிறுவனங்களுக்கு அவை என்ன நோக்கத்திற்காக செயற்கை கோள்களை செலுத்த விரும்புகின்றனர் என்பன போன்ற விவரங்களை இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் மையம் தெரிந்துகொண்டு அதன்பிறகு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும். இதுவரை 140-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயற்கை கோள்களை செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறது” என்றார்.
முதலமைச்சரின் ஒத்துழைப்பு
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், குலசேகரபட்டினத்தில் நடைபெற இருக்கும் பணிகளுக்கு அனுமதி பெறுதல், மின் இணைப்பு பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது இந்த ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதியளித்ததாக சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் தெரிவித்தார்.
இஸ்ரோ திட்டத்திற்கு முதலமைச்சரின் இந்த ஆதரவு பாராட்டுக்குரியது. இது நாட்டின் முன்னேற்றத்துக்கு தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் எத்தகையதாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.
ரூ. 950 கோடி செலவில் அமைய இருக்கும் குலசேகரன்பட்டின ஏவுதளத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவதிலும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவையான 2,400 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 400 ஏக்கர் நிலமும் அடுத்த மாதத்துக்குள் கையகப்படுத்தப்பட்டுவிடும். இப்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி வேகமாக நடக்கிறது.
ஏவுதளத்தின் கட்டுமான பணியின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானம், பொறியியல் மற்றும் தளவாடங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஸ்கில்டு மற்றும் அன்ஸ்கில்டு தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படுவார்கள். கூடுதலாக, உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் துணைத் தொழில்களின் வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.
இதனால் இந்திய அளவில் மட்டுமல்லாது மாநிலத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். இதனால் குலசேகரன்பட்டினமும் தமிழ்நாடும் வருங்காலத்தில் சர்வதேச அளவில் முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும் பெருமையும் கிடைத்துள்ளது எனலாம்!