“அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழலும் ரெய்டும்’ தான்!” – ஸ்டாலின் காட்டம்!

திமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதைத் தொடர்ந்து, “அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக சாடி உள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழலும் ரெய்டும்’ தான்” என்றும் காட்டமாக கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானதாக இல்லை. அதிமுக. – பாஜக கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

நீட் தேர்வை – இந்தித் திணிப்பை – மும்மொழிக் கொள்கையை – வக்ஃப் சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அதிமுக; தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அதிமுக. – இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை. அதிமுக தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக திமுக-வையும் திமுக அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதைப் பார்த்தவர்கள் அறிவார்கள்.

மாநில உரிமை – மொழியுரிமை – தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பாஜக – அதிமுக. கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை – தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.

நீட் தேர்வைப் பற்றி ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பிய போது அதற்கு சரியான பதிலை உள்துறை அமைச்சரால் சொல்ல முடியவில்லை. ‘நீட் தேர்வு சரியானது’ என்றாவது தனது வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, ‘நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது’ என்ற திசை திருப்பும் பதிலையே உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்.

‘ஊழலுக்காக பதவி இழந்தவர் ஜெயலலிதா’

அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய காட்சியைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது?

இன்றைய அதிமுக. பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பாஜக தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுக-வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.

தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை – எனத் திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக தலைமை. பழைய கொத்தடிமைக் கூடாரமான அதிமுக-வின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bareboat yacht charter. hest blå tunge. Alex rodriguez, jennifer lopez confirm split.