உறுதியானது பாஜக கூட்டணி: அதிமுகவுக்கான சாதகங்கள், சவால்கள் என்ன?

நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) கீழ் இணைந்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் முன்னாள் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட அமித் ஷா, “இந்த கூட்டணி தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியாலும், தமிழகத்தில் இபிஎஸ் மற்றும் அதிமுகவாலும் வழிநடத்தப்படும்” என்று அறிவித்தார்.
இந்தக் கூட்டணி அதிமுகவுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்தாலும், அதன் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. இபிஎஸ்ஸின் தலைமையில் இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா, அதிமுக அதன் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அரசியல் விமர்சகர்களால் எழுப்பப்படுகின்றன.
கூட்டணியின் பின்னணி
1998 முதல் பலமுறை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக, 2023 ல் அண்ணாமலையின் கருத்துகள் காரணமாக பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. இதனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து நின்று போட்டியிட்ட நிலையில், ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில், 2026 தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்கொள்ள, இரு கட்சிகளும் தற்போது மீண்டும் இணைந்துள்ளன.
ஷா தனது பேட்டியில், இபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது, அதிமுகவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
இந்த நிலையில், இது குறித்து பேசிய அதிமுக மூத்த தலைவர் ஒருவர், “இபிஎஸ் இந்தக் கூட்டணியை ஏற்றது, திமுகவை எதிர்க்க வேறு வழியின்மையால் மட்டுமல்ல. பாஜகவுடன் இணைந்தால், மத்திய அரசின் ஆதரவு மற்றும் நிதி உதவி கிடைக்கும். இது தேர்தல் பிரச்சாரத்துக்கு பலம் சேர்க்கும். அதே சமயம் பாஜகவின் தலையீடு அதிமுகவின் சுயாட்சியைப் பாதிக்கலாம் என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் உள்ளது ” என்றார்.
பாஜகவின் வியூகம்

நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கியது, அதிமுகவுடன் உறவை மேம்படுத்த பாஜக எடுத்த முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் காட்டமான விமர்சனங்கள் அதிமுகவைப் புண்படுத்தியதால், நயினாரின் அமைதியான அணுகுமுறை கூட்டணிக்கு சாதகமாக அமையும் என பாஜக நம்புகிறது. “தமிழகத்தில் பாஜகவுக்கு தனித்து செல்வாக்கு குறைவு. அதிமுகவின் கிராமப்புற வாக்கு வங்கி இல்லையெனில், திமுகவை எதிர்க்க முடியாது. ஆனால் இவ்விருகட்சிகள் இணைந்தாலும், திமுகவின் ஒருங்கிணைந்த கூட்டணியை எதிர்கொள்வது எளிதல்ல” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிமுகவுக்கான சாதகங்கள்
இந்தக் கூட்டணி அதிமுகவுக்கு பல வழிகளில் உதவலாம். பாஜகவின் மத்திய ஆதரவு மற்றும் நிதி வளங்கள், தேர்தல் பிரச்சாரத்துக்கு பலம் சேர்க்கும். இரண்டாவதாக, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இரு கட்சிகளின் வாக்கு வங்கி ஒருங்கிணைந்தால், திமுகவுக்கு கடும் சவால் அளிக்க முடியும். மூன்றாவதாக, இபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது, கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும். “இபிஎஸ்ஸின் தலைமையில், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என அமித் ஷா அறிவித்ததும், பாஜகவுடன் இணைந்ததும், எங்களுக்கு தேவையான வாக்கு பலத்தைத் தரும்” என நம்பிக்கை தெரிவிக்கிறார் கொங்குமண்டல அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர்.
சவால்கள் என்ன?

ஆனால், இந்தக் கூட்டணி அதிமுகவுக்கு சில எதிர்கால சவால்களையும் கொண்டுள்ளது. முதலாவதாக, பாஜகவின் மத்திய கொள்கைகளான நீட், தேசிய கல்விக் கொள்கை, மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, மற்றும் வக்ஃப் திருத்த மசோதா ஆகியவை தமிழகத்தில் பரவலான எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. இவற்றுடன் இணைந்து, அதிமுக “தமிழக விரோத” கட்சியாக சித்தரிக்கப்படலாம். திமுக, இந்த விவகாரங்களை முன்னிறுத்தி, அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் வாய்ப்பு உள்ளது.
இரண்டாவதாக, பாஜகவுடன் மீண்டும் இணைவது, அதிமுகவின் சிறுபான்மை வாக்கு வங்கியை பாதிக்கலாம். “தொண்டர்கள் மத்தியில் பாஜக மீது இன்னும் கசப்பு உள்ளது. குறிப்பாக, அண்ணாமலையின் முந்தைய கருத்துகள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை அவமதித்ததாக உணரப்பட்டது. இந்தக் கூட்டணி எங்கள் அடையாளத்தை பலவீனப்படுத்தலாம்” என்று அதிமுகவின் மற்றொரு மூத்த தலைவர் கவலை தெரிவித்தார்.
மூன்றாவதாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தேர்தலில் புதிய சவாலாக உருவாகியுள்ளது. இளைஞர்களிடையே விஜய்யின் செல்வாக்கு, அதிமுக-பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியை பிரிக்கலாம். தவெக திமுகவை முதன்மை எதிரியாக அறிவித்தாலும், அதிமுகவின் இளைஞர் ஆதரவு பாதிக்கப்படலாம்.
இபிஎஸ்ஸின் தலைமை
இபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது, அதிமுகவுக்கு ஒரு தெளிவான திசையை காட்டுகிறது. ஆனால், கட்சிக்குள் ஒற்றுமையைப் பேணுவது அவருக்கு பெரிய சவாலாக உள்ளது. ஓ. பன்னீர்செல்வம் போன்ற மூத்த தலைவர்களின் பிரிவு, கட்சியின் பலத்தை ஏற்கனவே குறைத்துள்ளது. “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல, எடப்பாடி கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். பாஜகவுடன் இணைந்து, தொண்டர்களின் மன உறுதியை மீட்டெடுக்க வேண்டும்” என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மொத்தத்தில் பாஜகவுடனான கூட்டணி, அதிமுகவுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்அதிமுகவின் தனித்துவமான அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தவெகவின் எழுச்சி, திமுகவின் திடமான கூட்டணி, மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் உணர்வு ஆகியவை அதிமுகவுக்கு சிக்கலாவும் உள்ளன. இபிஎஸ், கட்சியை ஒருங்கிணைத்து, தொண்டர்களின் நம்பிக்கையைப் புதுப்பித்தால், 2026 ல் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதைய கூட்டணி முடிவு தவறாக போகும்பட்சத்தில் அது அக்கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கலாம்.
சாதகமோ பாதகமோ 2026 தேர்தல் முடிவு அதை சொல்லிவிடும்!