அன்புமணியை நீக்கிய ராமதாஸ்… பாமக-வில் மீண்டும் வெடித்த மோதல்… பின்னணி தகவல்கள்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக அறிவித்து கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பி உள்ளார் ராமதாஸ்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28 அன்று, விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், இளைஞர் அணி தலைவர் பதவி நியமனத்தை மையமாக வைத்து ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. ராமதாஸ், தனது பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக அறிவித்தபோது, அன்புமணி, “கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன ஒருவருக்கு இப்பதவியை எப்படி கொடுக்க முடியும்?” என்று எதிர்ப்பு தெரிவித்தார். “கட்சியில் அனுபவமுள்ளவர்களுக்கு பதவி கொடுங்கள்” என்று வலியுறுத்திய அவர், ராமதாஸின் முடிவை ஏற்க மறுத்தார்.
அன்புமணியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்” என மேடையிலேயே அன்புமணியிடம் காட்டமாக கூறினார். அன்புமணி உடனே எழுந்து, “என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்” எனச் சொல்லி எழுந்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து சமாதானம் செய்ததாக தகவல் வெளியானது. தைலாபுரத்தில் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். “பாமக ஒரு ஜனநாயக கட்சி; காரசார விவாதங்கள் இயல்பு” என்று அன்புமணி விளக்கமளித்தாலும், உள்ளுக்குள் பனிப்போர் தொடர்ந்ததாக பாமக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
மீண்டும் வெடித்த மோதல்
இதனை உறுதிப்படுத்தும் வகையில், தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “இது நான் ஆரம்பித்த கட்சி. எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக்கொள்கிறேன். பாமக தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். கௌரவத் தலைவராக ஜி.கே.மணியை நியமிக்கிறேன்.
மே 11 ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமையும். இதற்கான பொறுப்பை அன்புமணி கவனித்துக்கொள்வார். புதிய அறிவுப்புக்கு பல காரணங்கள் உண்டு. எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்தவே முடிவு எடுத்துள்ளேன். கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்துப்பேசி முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பால் பாமக-வில் உள்ள அன்புமணி ஆதரவாளர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
அன்புமணி ஆதரவாளர்கள் போராட்டம்
இந்த நிலையில், பாமக தலைவர் ராமதாஸ் முடிவுக்கு அக்கட்சியில் உள்ள அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீடு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ” தலைவர் பதவியில் அன்புமணியே நீடிக்க வேண்டும்” என முழக்கமிட்டனர். இதனால், இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. இதனிடையே பாமக பொருளாளர் திலக பாமாவும் ராமதாஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் காட்டமாக கூறி உள்ளார்.
தலைமை மாற்றத்தின் பின்னணி
ராமதாஸின் தற்போதைய அறிவிப்பு, இருவருக்கும் இடையேயான முந்தைய மோதலின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. 2022 மே மாதம், அன்புமணி பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கட்சியை இளைஞர்களால் வழிநடத்தப்படும் புதிய அமைப்பாக மாற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், ராமதாஸ் தொடர்ந்து முக்கிய முடிவுகளில் தலையிட்டார். “2026 தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைப்போம்” என்று ராமதாஸ் கூறியது, அன்புமணியின் திட்டங்களுக்கு மாறாக இருந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “அன்புமணி, பாஜகவுடன் கூட்டணியை வலுப்படுத்தி, 2026-ல் முதல்வர் பதவியை நோக்கி செல்ல திட்டமிட்டார். ஆனால், ராமதாஸ் அதை ஏற்கவில்லை. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி அமைப்பதை ராமதாஸ் விரும்பவில்லை” என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ராமதாஸின் இப்போதைய முடிவு, தனது ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. “இளைஞர்களை வழிநடத்துவதற்கு” என்று அவர் கூறினாலும், 85 வயதாகும் ராமதாஸ், கட்சியின் முழு கட்டுப்பாட்டை தக்கவைக்கவே இதை செய்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். “அன்புமணியை செயல் தலைவராக்குவது, அவரது அதிகாரத்தை குறைப்பதற்கான உத்தி” என்றும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் எதிர்காலம்
இந்த நிலையில், பாமக-வுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மோதல், கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. ஒருபுறம், ராமதாஸின் பழைய பாணி தலைமை, வன்னியர் சமூகத்தின் ஆதரவை தக்கவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபுறம், அன்புமணியின் நவீன அணுகுமுறை, பரந்த அரசியல் அடித்தளத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால், இந்த இரு தரப்பு மோதலால், கட்சி தொண்டர்களிடையே குழப்பம் நிலவுகிறது. “ராமதாஸ்-அன்புமணி இடையேயான இந்த பிளவு, 2026 தேர்தலில் பாமக-வை பலவீனப்படுத்தும்” என அக்கட்சியினர் கவலை தெரிவிக்கின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் போனது அன்புமணியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. “ராமதாஸ் இப்போது தலைமை பொறுப்பை ஏற்பது, கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இருக்கலாம். ஆனால், அன்புமணியின் ஆதரவாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியே” என்று என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பாமக-வின் தற்போதைய நெருக்கடி, தலைமைப் பதவியை மையமாகக் கொண்டது மட்டுமல்ல; இது, கட்சியின் எதிர்கால போக்கைத் தீர்மானிப்பதற்கான மோதலாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தந்தை-மகன் மோதல், பாமக-வை ஒரு திருப்புமுனையை நோக்கி அழைத்துச் செல்லுமா, அல்லது சரிவை நோக்கிய பயணமாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.