நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு!

தமிழ்நாடு அரசு, ‘நீட்’ தேர்வுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. புதன்கிழமை அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் உறுதி செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை கடந்த 2021 செப்.13-ம் தேதி நான் முன்மொழிந்தேன். அந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், அரசியல் செய்ய ஆரம்பித்தார். கடந்த 2022 பிப்.1-ம் தேதி திருப்பியனுப்பினார், பிப்.8-ம் தேதி மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன்.
தொடர்ந்து, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினேன். அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சிகளால், ஆளுநர் சட்ட மசோதாவை கடந்த 2022 மே 4-ம் தேதி குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார். அதன்பின், மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற முயற்சி எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை, உள்துறை, உயர்கல்வித்துறைகளுக்கு அனைத்து விளக்கங்களையும் அரசு உடனுக்குடன் வழங்கியது. ஆனால், அவற்றை ஏற்காமல், நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நமது சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு
அதனைத் தொடர்ந்து, தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ” நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், விலக்கை பெற தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இந்த வகையில், நீட் தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்பட்டால், புதிய வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென்றும் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்
அதன்பின், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் கட்சி பங்கேற்கவில்லை.