ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: வங்கி கடன் தவணை எவ்வளவு குறையும்?

ங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த வட்டி விகித குறைப்பை அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில், ரெப்போ விகிதங்களை மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6 சதவீதமாக ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.

இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, கடன் தவணை தொகை (EMI) மேலும் குறைய வாய்ப்புள்ளது. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து, அவற்றுக்கான கடன் தவணை தொகை குறையும்.

கடன் தவணை எவ்வளவு குறையும்?

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற செலுத்தும் வட்டி. இது குறையும்போது, வங்கிகளுக்கு கடன் பெறுவது சுலபமாகிறது. அதன் பலனை அவை பொதுமக்களுக்கு அளிக்கும் கடன்களின் வட்டி விகிதத்தில் பிரதிபலிக்கின்றன.

வீட்டுக் கடன்களும், வாகனக் கடன்களும் பெரும்பாலும் மாறக்கூடிய வட்டி விகிதத்தில் (Floating Rate) இருப்பதால், இந்தக் குறைப்பு நேரடியாக ஒருவரின் EMI-ஐ பாதிக்கும். ஆனால், எவ்வளவு குறையும் என்பது கடன் தொகை, கால அளவு மற்றும் வங்கியின் முடிவைப் பொறுத்தது.

உதாரணமாக ஒருவர் 50 லட்ச ரூபாய் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளுக்கு 8.5% வட்டியில் பெற்றிருந்தால், அவரது மாத EMI சுமார் 43,391 ரூபாயாக இருக்கும். இப்போது 0.25% குறைப்பால் வட்டி 8.25% ஆக மாறினால், EMI தொகை 42,452 ரூபாயாகக் குறையும். அதாவது, மாதம் 939 ரூபாய் சேமிப்பு; ஆண்டுக்கு 11,268 ரூபாய் லாபம்! இது சிறிய தொகையாகத் தோன்றினாலும், 20 ஆண்டுகளில் மொத்தம் 2.25 லட்ச ரூபாய் வரை சேமிக்கலாம்.

உடனடி பலன் உண்டா?

அதேபோல், 10 லட்ச ரூபாய் வாகனக் கடனை 5 ஆண்டுகளுக்கு 9.5% வட்டியில் பெற்றிருந்தால், EMI தொகை 210 ரூபாய் குறைந்து, ஆண்டுக்கு 2,520 ரூபாய் சேமிக்கலாம். இருப்பினும், இந்த சேமிப்பு உடனடியாகக் கிடைக்காது. வங்கிகள் இந்த பலனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அடுத்த மறு மதிப்பீட்டு காலத்தில் (Reset Period) பிரதிபலிக்கும். பெரும்பாலான மாறக்கூடிய வட்டிக் கடன்களுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றப்படும்.

எனவே, வங்கிக் கடன் வாங்கியவர்கள் தங்களது கடன் ஒப்பந்தத்தை சரிபார்த்து, வங்கியிடம் உறுதிப்படுத்துவது நல்லது. சில வங்கிகள் EMI-ஐ குறைப்பதற்கு பதிலாக கடன் காலத்தை குறைக்கலாம், இது மொத்த வட்டிச் செலவை மேலும் குறைக்க உதவும்.

இதனிடையே பொருளாதார வல்லுநர்கள், 2025 இறுதிக்குள் ரெப்போ விகிதம் 5.5% ஆகக் குறையலாம் என கணிக்கின்றனர். இது நடந்தால், EMI மேலும் குறையும்; குறிப்பாக, தொழில் தொடங்குபவர்களுக்கும், வீடு வாங்குபவர்களுக்கும் இது பெரும் ஊக்கமாக அமையும். ஆனால், பணவீக்கம் எதிர்பாராத விதமாக உயர்ந்தால், இந்த பலன்கள் தடைபடலாம் என்பதையும் மறக்கக்கூடாது.

சேமிப்பாளர்களுக்கு பாதிப்பு

மறுபுறம், இது சேமிப்பாளர்களுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். வங்கி வைப்பு வட்டி விகிதமும் குறையலாம் என்பதால், நிரந்தர வைப்புத்தொகை (FD) மூலம் வருமானம் பெறுபவர்கள் மாற்று முதலீடுகளை பரிசீலிக்க வேண்டியிருக்கும். ஆக, இந்த ரெப்போ விகிதக் குறைப்பு கடன் வாங்குபவர்களுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம், ஆனால் அதன் முழு பலனை அறுவடை செய்ய பொறுமையும், திட்டமிடலும் தேவை என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mushroom ki sabji : 5 delicious indian mushroom recipes brilliant hub. Aston villa 4 1 newcastle united : premier league – as it happened | premier league. Find the best price private yacht charter or bareboat for rent that fits your comfort*.