மனோஜ் பாரதிராஜா: தந்தையின் புகழால் போராடிய கலைஞன்!

தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இது ஒரு மரணம் மட்டுமல்ல; ஒரு தலைமுறையின் நம்பிக்கையும், தோல்வியும் சேர்ந்து மறைந்த கதை என்றே சொல்ல வேண்டும்.
மனோஜ், திரையுலகில் தனக்கான ஒரு அடையாளத்தை எப்படியும் பெற்றுவிடலாம் எனத் தீவிரமாக போராடினார். ஆனால், அவரது திரைப்பயணம், பாரதிராஜாவின் ஆர்வத்திற்கும், தமிழ் சினிமாவின் மாறும் சூழலுக்கும் இடையே சிக்கிக்கொண்டுவிட்டது. கூடவே தந்தையின் பிரபலமும் அவரால் கிடைத்த அறிமுகமும் மட்டுமே ஒரு கலைஞனுக்கு தொடர் வாய்ப்பைப் பெற்று தந்துவிடாது என்பதையும் உணர்த்திவிட்டது திரையுலகில் அவர் சந்தித்த போராட்டங்கள்.
திரையுலகுக்கு வந்த பின்னணி
மனோஜ், 1999-ல் தந்தை பாரதிராஜா இயக்கத்தில் உருவான‘தாஜ்மஹால்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் ( கதை இயக்குநர் மணிரத்னம்). “மனோஜை ஒரு நட்சத்திரமாக்க வேண்டும் என்பது பாரதிராஜாவின் கனவு. அவர் ஒரு தந்தை என்பதை தாண்டி, ஒரு இயக்குநராக அவரை செதுக்க முயன்றார்” என்று பாரதிராஜாவின் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.

1970-80 களில் தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களிலிருந்து கிராமத்துக்கு அழைத்துச் சென்று புரட்சிகரமாக்கிய பாரதிராஜா, மனோஜ் மூலம் தன் பாரம்பரியத்தை தொடர விரும்பினார். ஆனால், 90களின் இறுதியில், மாஸ் ஹீரோக்களின் ஆதிக்கம் மற்றும் வணிக சினிமாவின் எழுச்சி, மனோஜுக்கு சவாலாக மாறியது.
மகனின் வளர்ச்சியில் பாரதிராஜாவின் ஆர்வம்
பாரதிராஜா, மனோஜை ஒரு பன்முக கலைஞனாக உருவாக்க ஆர்வம் காட்டினார். ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’ போன்ற படங்களில் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. “மனோஜுக்கு நடிப்பு மட்டுமல்ல, பாட்டு, நடனம், கதை எழுதுதல் எல்லாம் கற்பிக்கப்பட்டது. பாரதிராஜா அவரை ஒரு முழுமையான நடிகனாக்க தீவிரமாக உழைத்தார்,” எனத் திரையுலகின் மூத்த நடிகர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால், மனோஜின் நடிப்பு, தந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ‘தாஜ்மஹால்’ ஓரளவு வெற்றி பெற்றாலும், பின்னர் வந்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.
எடுபடாமல் போனதன் வருத்தம்
மனோஜின் தோல்விகள், பாரதிராஜாவை ஆழமாக பாதித்தன. “என்னால் மனோஜை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு என் பாணி பொருந்தவில்லை போலும்,” என்று பாரதிராஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 2000 களில், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், மனோஜின் மென்மையான பிம்பம் அந்த காலகட்டத்தில் அவருக்குப் பொருந்தவில்லை. 2023-ல் ‘மார்கழி திங்கள்’ படத்தை இயக்கி, தன் தந்தையின் பாணியை பின்பற்ற முயன்றார். ஆனால், அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. “மனோஜ் ஒரு திறமைசாலி, ஆனால் சினிமாவின் வேகத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியாமல் போய்விட்டது,” என்கிறார் இது குறித்துப் பேசிய இயக்குநர் ஒருவர்.

போராடிய மனோஜ்
“மனோஜ் ஒரு எளிய கலைஞன். அவர் தன் தந்தையின் புகழ் நிழலில் சிக்கிக்கொண்டு, தன்னை வெளிப்படுத்த போராடினார். பாரதிராஜாவின் ஆர்வம் மனோஜை ஒரு பாதையில் தள்ளியது. ஆனால், அவருக்கு வேறு ஒரு பயணம் தேவைப்பட்டிருக்கலாம். அந்த வகையில் பார்த்தால், மனோஜின் மரணம், பாரதிராஜாவின் கனவு நிறைவேறாத வலியை மீண்டும் நினைவூட்டுகிறது” என்கின்றனர் அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் பாரதிராஜாவின் புகழ் அவரது மகனுக்கு ஒரு சுமையாகவே மாறிப்போனது என்பதையும், பரம்பரை மட்டும் வெற்றியை தீர்மானிக்காது என்பதையும் உணர்த்துகிறது. இருப்பினும், மனோஜ் பாரதிராஜாவின் திரையுலக பயணம், வெற்றியை விட அவரது முயற்சியை பேசுகிறது என்று தான் சொல்ல வேண்டும்!