இருமொழி காக்க, மக்களின் குரலை மீட்டெடுக்க மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்பு!

மிழ் மொழியின் பாதுகாப்பையும், தமிழ்நாட்டு மக்களின் குரலையும் மீட்டெடுக்கும் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பான ஒரு புதிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய அவர், “இருமொழிக் கொள்கை நம் உயிர்க் கொள்கை,” என்று தெளிவாக அறிவித்த முதலமைச்சர், “நிதிக்காக இனமானத்தை அடகு வைக்க மாட்டோம்” என்று உறுதியாகக் கூறினார்.

“இங்கு இருமொழிக்கொள்கை குறித்து என்ன உணர்வோடு நாங்கள் இருக்கிறோம், தமிழ்நாடு இருக்கிறது என்பதை பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏன் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள், குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இங்கே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக-வை சார்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்கள். இன்று காலையில் நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் டெல்லிக்குச் சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.

தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இது மொழிக் கொள்கை மட்டுமல்ல; நமது வழிக் கொள்கையும் – விழிக் கொள்கையும் இதுதான்!

இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும்; பணமே வேண்டாம் – தமிழ்மொழி காப்போம் என்ற அந்த உறுதியை நான் பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெருமக்கள் முன்னிலையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

அவர்கள் நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை அல்ல நாங்கள். தடைக்கற்கள் உண்டு என்றால், அதை உடைத்து எரியும் தடந்தோள்கள் உண்டென்று என்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது. இந்த ஆட்சியில், சமூகநீதியும் தமிழ்மொழிக் காப்பும் இருகண்கள்!

இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் – மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

相?. Lcc instruksikan opd dan deputi bp batam gerak cepat atasi persoalan banjir. meet marry murder.