இன்ஜினீயரிங் கலந்தாய்வு நாட்கள் குறைகிறது? – சாதக பாதகங்கள்..!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட பொறியியல் (இன்ஜினீயரிங்) கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு மட்டும் சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இதை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) மேற்பார்வையிடுகிறது.
இந்த நிலையில், வரவிருக்கும் 2025-26 கல்வியாண்டுக்கான இன்ஜினீயரிங் கலந்தாய்வு செயல்முறையில் முக்கிய மாற்றம் நிகழலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இன்ஜினீயரிங் படிப்புக்கான வகுப்புகளை முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் இன்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குறைப்பு ஏன்?
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட உள்ளது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு செயல்முறை துரிதப்படுத்தப்படும். கடந்த ஆண்டு (2024) கலந்தாய்வு ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை நீடித்தது. ஆனால் இந்த முறை, ஜூலை 2 ஆவது வாரத்தில் தொடங்கி, குறுகிய காலத்தில் முடிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1.70 லட்சம் இடங்களுக்கு, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த மாற்றம் நேரத்தை மிச்சப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
எப்படி சாத்தியம்?
இன்ஜினீயரிங் சேர்க்கையின் ஒவ்வொரு படியும்—விண்ணப்ப பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசை பட்டியல் வெளியீடு, தேர்வு நிரப்பல், இட ஒதுக்கீடு—ஆன்லைனில் நடைபெறுவதால், செயல்முறையை விரைவுபடுத்த முடியும். மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைன் தளத்தின் திறனை முழுமையாக பயன்படுத்தி, கலந்தாய்வு கால அளவை சுருக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலும் முன்கூட்டியே வெளியிடப்படும்.

சாதக பாதகங்கள்
” இது மாணவர்களுக்கு விரைவாக கல்லூரி இடம் பெற உதவும் என்றாலும், குறுகிய நேரத்தில் முடிவெடுக்க வேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் கல்வியாளர்கள். அதே சமயம், இந்த மாற்றம் சில நன்மைகளையும் தரலாம். முதலில், வகுப்புகள் சீக்கிரம் தொடங்குவதால், மாணவர்களுக்கு முதல் செமஸ்டரை முழுமையாக பயன்படுத்த நேரம் கிடைக்கும்.
ஆனால், கலந்தாய்வு நாட்கள் குறைவதால், மாணவர்கள்—குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்—தங்கள் விருப்பங்களை தேர்ந்தெடுக்க போதுமான நேரம் இல்லாமல் தடுமாறலாம். 2024-ல், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றபோது, மூன்று சுற்றுகளாக நடந்த கலந்தாய்வு 66% இடங்களை மட்டுமே நிரப்பியது. இந்த ஆண்டு, குறுகிய காலத்தில் அதிக மாணவர்களை கையாள வேண்டிய சவால் உள்ளது குறிப்பிடத்தக்கது.