இஸ்ரோ விஞ்ஞானியே பாராட்டி விட்டார்!
சந்திராயன் 3 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது நமக்குத் தெரியும். உலகிலேயே நிலவின் தென்பகுதியில் இறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை கொடுத்தது சந்திராயன் 3.
சந்திராயன் 3 திட்டத்திற்கான பணிகளைப் பார்வையிடுவதற்காக நாசா விஞ்ஞானிகள் சிலரை இஸ்ரோவுக்கு அழைத்திருந்தார்கள். ஒரு ஐந்தாறு நிபுணர்கள் இஸ்ரோவுக்கு வந்தார்கள். ‘சந்திராயன் 3 திட்டம்’ நிலவை ஆய்வு செய்யும் திட்டம். இதில் ‘விக்ரம்’ என்ற தரையிறங்கியையும் ‘பிரக்யான்’ என்ற தரை ஊர்தியையும் எப்படி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்பப் போகிறார்கள்; அவை இரண்டும் நிலவின் தென்பகுதியில் இறங்க இருப்பது பற்றியெல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள், நாசாவில் இருந்து வந்த நிபுணர்களிடம் விளக்கினார்கள்.
இஸ்ரோவில் இருந்த விஞ்ஞான உபகரணங்களை எல்லாம் பார்த்த அமெரிக்க நிபுணர்கள், “ மிகவும் மலிவான செலவில், திறன் வாய்ந்த உபகரணங்களாக இருக்கின்றன” என்று பாராட்டினார்கள். “ இதை ஏன் நீங்கள் அமெரிக்காவிற்கு விற்கக் கூடாது?” என்றும் கேட்டார்களாம்.
இந்தத் தகவல்களை எல்லாம் சொன்னது வேறு யாரும் அல்ல; இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்தான். ராமநாதபுரத்தில் நடந்த அப்துல்கலாமின் 92வது பிறந்த நாள் விழாவில், மாணவர்கள் மத்தியில் பேசும் போது அவர் இதையெல்லாம் கூறினார்.
இஸ்ரோவின் விஞ்ஞானச் செயல்பாடுகளில் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. சமீபத்தில் சந்திராயன் 3 திட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளைப் பாராட்டி பரிசுத்தொகையும் கொடுத்தார் முதலமைச்சர். அதற்கு நன்றி சொல்வதற்காக சென்னை வந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். நன்றி சொல்லி விட்டு, நிருபர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு எந்த அளவுக்கு இஸ்ரோவின் பணிகளில் பங்களிக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளம் 50 ஆண்டுகள் பழமையானது. நமது குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக தமிழ்நாடு அரசு, குலசேகரபட்டினத்தில் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கியுள்ளது.
விண்வெளித் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் சிறந்த பங்களிப்பைச் செய்யும் தொழிற்சாலைகள், தமிழ்நாட்டில் வளர்ந்து வருகின்றன. ஏராளமான தொழிற்சாலைகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை எனப் பல இடங்களில் வந்து கொண்டிருக்கின்றன என்று சோம்நாத் சொன்னது தமிழ்நாட்டிற்குப் பெருமை.
“குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிக்கு சாலை வசதிகள், மின்சார வசதி, கட்டுமானப் பணிகள் போன்ற எல்லாவற்றிற்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்” என முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டதாகவும் சோம்நாத் கூறினார்.
தமிழ்நாடு, ‘தொழிற்சாலை பூங்கா’ அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதுவும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் சோம்நாத் தெரிவித்தார். மேலும், விளையாட்டில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டு, சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுப் பதக்கங்கள் வென்றதற்கு, தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.