சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்த தூத்துக்குடி பேராசிரியர்!

மிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தொடர்ந்து, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் புவியியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ். செல்வம் மூலம் மற்றொரு பெருமை கிடைத்துள்ளது.

எல்சேவியர் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள்’ பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இவரது பெயர் இடம்பெற்றுள்ளதன் வாயிலாக தமிழ்நாடு, உலக அரங்கில் தனது கல்வித் திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது எனச் சொல்லலாம்.

பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் செல்வம், இதுவரை 80 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை இத்துறை சார்ந்த ஆராய்ச்சி பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள் மற்றும் நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், இத்துறை வளர்ச்சிக்கான ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளது.

22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 210,198 விஞ்ஞானிகள் இந்த பட்டியல் வெளியீட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இதில் 4,635 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள 11 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 89 ஆராய்ச்சியாளர்களும், மாநிலத்தில் உள்ள 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருந்து 143 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இத்தனை பேர்களுக்கிடையேதான் ‘உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள்’ பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, செல்வத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள பேராசிரியர் டாக்டர் எஸ். செல்வத்தைத் தொடர்புகொண்டு ‘அமேசான் தமிழ்’ சார்பில் அவருக்கு நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, “உங்களுக்கான இந்த அங்கீகாரத்தை தனிப்பட்ட முறையிலும், ஒரு பேராசிரியராகவும் எப்படி உணர்கிறீர்கள்..?எனக் கேட்டபோது, “எனக்கு இந்த விருது கிடைத்தது குறித்து ரொம்ப சந்தோஷம். அதுலேயும் ஒரு கல்லூரி அளவில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது” என்றார்.

மனிதர்களை அச்சுறுத்தும் மாசுபாடு

“உங்கள் ஆராய்ச்சியில் முக்கியமான கண்டுபிடிப்புகள் என்றால் எதை குறிப்பிடுவீர்கள்?” என்ற கேள்விக்கு, Pollution (மாசு) தான் என்றார். தான் வசிக்கும் தூத்துக்குடியின் சில பகுதிகளிலேயே மாசுபாடான நிலத்தடி நீரால், பற்களில் மஞ்சள் கறை, எலும்புகள் பிரச்னை போன்றவற்றை மக்கள் எதிர்கொள்வதை குறிப்பிடலாம் என்றார்.

மேலும், “மைக்ரோ பிளாஸ்டிக். பிளாஸ்டிக் நுண்துகள்கள் எனப்படும் இவை மனிதர்கள் உண்ணும் மீன்கள் முலம் உடலுக்குள் சென்று தீங்கு விளைவிப்பதையும் குறிப்பிடலாம். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் போன்றவற்றின் காரணமாக கடந்த 10, 20 ஆண்டுகளாக பூமி மாசுபடுதல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. புதுப்புது வைரஸ்கள் தலைதூக்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் மக்களிடையே காணப்படும் அதிகமான நுகர்வுத்தன்மைதான். தேவைக்கு அதிகமான பொருட்களின் பயன்பாடும், பின்னர் அதை தூக்கி எறிவதினால் அதிகமாக குப்பைகள் மற்றும் கழிவுகளினால்தான் பூமியின் மாசுபாடு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்துவிடும். அடுத்ததாக சொல்வது என்றால் அது பிளாஸ்டிக்தான். குடிக்கும் டீ-யில் இருந்து பல்வேறு வகையில் மனிதர்களின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் அச்சடிக்கப்பட்ட செய்தி தாள்களில் வைத்து வடை போன்றவற்றை சாப்பிடுவது போன்றவற்றினால் இவற்றில் உள்ள நச்சு பொருட்கள் மனிதர்களின் உடலில் நேரடியாக சென்று சேர்கிறது. இதெல்லாம்தான் மனிதர்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

கடலுக்குள் செல்லும் நிலத்தடி நீர்

அடுத்ததாக நிலத்தடி நீர். தொழிற்சாலைகளின் கழிவு நீர், ஆலைகளிலிருந்து திறந்துவிடப்படும் ரசாயன கழிவு நீர், மற்றும் மக்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் வெளியேறும் கழிவு நீர் போன்றவற்றினால் நிலத்தடி நீர் வெகுவாக மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. இதைத்தான் மக்கள் குடிக்கின்றனர் என்பதால், இதனாலும் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலை அப்படியே நீடித்தால் மனித குலம் கூட்டம் கூட்டமாக உயிரிழக்க வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

நமக்கு நீரிழிவு நோய் வரவில்லை என்றால் உணவில் எந்த கட்டுப்பாடும் இருக்காது. ஆனால் நீரிழிவு நோய் வந்துவிட்டால் உணவில் கட்டுப்பாடு இருக்கும். அப்படிதான் மாசுபாடு பற்றி தெரிந்துகொண்டால் மாசை ஏற்படுத்தமாட்டோம் ” எனக் கவலையும் அக்கறையுமாக பேசிய செல்வம், தனது ஆராய்ச்சியில் தெரியவந்த மிக முக்கியமான விஷயம், பூமிக்கடியிலிருந்தே நிலத்தடி நீர் மிக வேகமாக கடலை நோக்கி செல்வதுதான் என்றும், இதனால் எதிர்காலத்தில் மிக அதிகமான பாதிப்புகள் ஏற்படும் என்றார்.

தனது ஆராய்ச்சி பணியில் எதிர்கொள்ளும் சவால் என்றால் அது நிதி பற்றாக்குறை தான் எனச் சொல்லும் செல்வம், “இதனை சமாளிக்க, வெளிநாடுகளில் இருக்கிற நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். அவர்களிடம் மாதிரிகளை கொடுத்து பகுப்பாய்வு செய்கிறோம். சிறிய சிறிய வேலைகள் செய்து கொடுக்கிறோம். அதன் மூலம் வருகிற நிதியை கொண்டு சமாளிக்கிறோம்” என்றார்.

‘ஆராய்ச்சி மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’

வளர நினைக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு எனது அறிவுரை அல்லது ஆலோசனைகள் என்றால், “கடினமாக உழைக்கவேண்டும். 36 வயதில் எனக்கு கிடைத்திருக்கிற இந்தப் பெயர் எளிதாக கிடைக்க இல்லை. இந்த பிரிவில் இரண்டே பேர் தான் தேர்வாகியிருக்கிறோம். ஒன்று நான், இன்னொன்று அண்ணா பல்கலைக்கழத்தை சேர்ந்த பேராசிரியர் இளங்கோ. அவருக்கு வயது 65. இதற்கு காரணம் கடின உழைப்பு, எந்த மாதிரியான கட்டுரைகளை வெளியிடுகிறோம், எந்த அளவிற்கு அது புதுமையானதாக இருக்கிறது என்பதெல்லாம் மிகவும் முக்கியமானது. நாம் செய்கிற ஆய்வு மக்களுக்கு எந்த அளவிற்கு உதவி செய்கிறது என்பதும் மிக முக்கியம். இளைஞர்கள் முதலில் கடினமாக உழைத்தால் பின்னர் அது ஸ்மாட்ர் வொர்க்-காக மாறிவிடும்.

ஆய்வகத்தை தொடங்கி அதில் நிறைய வேலை செய்தால் இந்த மாதிரியான இடத்திற்கு எளிதாக வரமுடியும்” என நம்பிக்கையுடன் முடித்தார் பேராசிரியர் செல்வம்!

மன உறுதி, கடின உழைப்பு, அறிவில் அர்ப்பணிப்பு இருந்தால், தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் உலக அரங்கில் முத்திரை பதிக்க முடியும் என்பதையும் விஞ்ஞானி செல்வத்துக்கு தற்போது கிடைத்த இந்த அங்கீகாரம் நிரூபிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of local domestic helper. A agência nacional de Águas e saneamento básico (ana) : um guia completo. , der installations fachhandel im kölner norden, existiert inzwischen seit über 100 jahren.