வரி செலுத்துவோர் இ-மெயில் உளவு பார்க்கப்படுமா… வருமான வரித்துறை சொல்வது என்ன?

புதிய வருமானவரி (ஐடி) மசோதாவில், வரிசெலுத்துவோரின் இ-மெயில் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்க்க வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
புதிய ஐடி மசோதாவில் பிரிவு 247 ன் படி, எந்த வாரண்டும் இல்லாமல், வரி செலுத்துவோரின் இமெயில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள், கிளவுட் சேமிப்பகங்களை பாஸ்வேர்டு இல்லாமலேயே அணுகக் கூடிய அளவுக்கு வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர்.
பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் பலர் அச்சம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், “வரி செலுத்துவோரின் சமூக ஊடக கணக்குகள் அல்லது ஆன்லைன் செயல்பாடுகளை வரித்துறை கண்காணிப்பதில்லை. இந்த அதிகாரங்கள் ரெய்டு அல்லது ஆய்வின் போது மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். அதுகூட ரெய்டுக்கு ஆளான நபர் டிஜிட்டல் ஆவணங்களின் பாஸ்வேர்டை பகிர மறுக்கும் சமயத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
தற்போதைய டிஜிட்டல் உலகில், முக்கிய தகவல்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வரில் சேமித்துவைக்கப்படுகின்றன. அவற்றை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. அதற்கான ரகசிய எண்ணை வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர் அளிப்பது இல்லை. வருமானவரி அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது இல்லை. இதனால் ஒட்டு மொத்த வருமானவரி சோதனையும் பலனின்றி போய்விடுகிறது. சம்பந்தப்பட்ட நபர் எளிதாக தப்பி விடுகிறார்.

எனவே, வருமானவரி சோதனையின்போது, டிஜிட்டல் வடிவத்தில் உள்ள கணக்குகளை ஆய்வு செய்வதற்காகத் தான் ரகசிய எண் கேட்டுப் பெற வருமானவரி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
‘ஏற்கனவே உள்ள அதிகாரம் தான்’
தற்போதைய 1961-ம் ஆண்டு வருமானவரி சட்டத்தின் 132-வது பிரிவிலேயே இந்த அதிகாரம் ஏற்கனவே உள்ளது. |அது, புதிய வருமானவரி மசோதாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வருமானவரி சோதனையின் போது மட்டுமே இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், சம்பந்தப்பட்ட நபர் எந்த தகவலையும் அளிக்க மறுத்தால் மட்டுமே அந்த அதிகாரம் பயன்படுத்தப்படும்.
மற்றபடி, வருமானவரி ஆய்வில் சிக்கி இருந்தால் கூட ஒருவரது ஆன்லைன் கணக்குகளை ஆய்வு செய்வது எங்கள் நோக்கம் அல்ல. சமூக வலைத் தள கணக்குகளை உளவு பார்க்க மாட்டோம். சமூக வலைத்தள கணக்குகள் மூலம் யாருக்கு எதிராகவும் பின்வாசல் வழியாக செயல்பட மாட்டோம். வரி செலுத்தும் சாமானியர் களை குறிவைத்து இந்த அதிகாரம் கொண்டுவரப்படவில்லை.
ஆண்டுக்கு 8 கோடியே 79 லட்சம் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவற்றில் சுமார் 1 சதவீத கணக்குகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

எனவே, உளவு பார்ப்பதற்காக வருமானவரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. அச்சத்தை உண்டாக்கும் நோக்கத்தில் பரப்பப்படும் வதந்திகளே அன்றி வேறு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.