புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா… தகுதிகள் என்ன?

தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில், புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். அதனடிப்படையில் யார், யாருக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், அதற்கான தகுதி என்ன என்பது குறித்தும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.
அதில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களான மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள். கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சை நிலங்கள், எதிர்ப்புகள் இல்லாது சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், மேட்டு நிலங்கள், மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழங்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.