இனி பி.எஃப் பணத்தை UPI,ஏடிஎம்கள் மூலமாகவே எடுக்கலாம்… எப்போது அமல்?

நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் பலர் வேலையை விடும்போதோ அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாறும்போதோ தங்களது பி.எஃப் பணத்தை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக புகார்கள் கூறப்படுகின்றன.
அதிலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது ஏதாவது ஒரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடுகிறது.
இதனால், ஊழியர்கள் உடனடியாக தங்களுக்குத் தேவைக்கு பணத்தை எடுக்க முடியாமல் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. 2024 இல் வெளியிடப்பட்ட EPF ஆண்டு அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் EPF இறுதி தீர்வு கோரிக்கைகளில் மூன்றில் ஒன்று மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணுமாறு ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், பி.எஃப் பணம் எடுப்பதற்கான செயல்முறையை ஒழுங்குபடுத்தவும், யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம்-கள் மூலமாக பிஃஎப் பணம் எடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எப்போது அமல்?
இந்த புதிய வசதி மூலம் ஜிபே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ தளங்களை பயன்படுத்தி, பிஃஎப் சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை உடனடியாக எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு, தற்போது என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் ஆலோசித்து வருகிறது. இந்த திட்டம் வருகிற மே அல்லது ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஊழியர்களுக்கு அது நிச்சயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.