“Incredible இளையராஜா… இதுக்கு மேல யாரும் வரப்போறது இல்லை”- லண்டனில் அரங்கேறும் சிம்பொனி!

‘அன்னக்கிளி’யில் கிராமிய வாழ்வின் சாரத்தை இசையில் கொடுத்து திரையுலகில் ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திய இளையராஜா, அடுத்த ஆண்டே ‘கவிக்குயில்’ படத்தில் ‘கிளாசிகல்’ இசையால் தாலாட்டினார்.
அடுத்து மார்டன் உலக கதாமாந்தர்களை வைத்து எடுக்கப்பட்ட ‘ப்ரியா’திரைப்படத்தில், நவீன இசையின் விளையாட்டை விஸ்வரூபமாக நிகழ்த்திக்காட்டினார். தமிழ் சினிமாவில் முதல் முறையாக ‘ஸ்டீரியோபோனிக்’ தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட அந்தப் படத்தின் பாடல்கள், ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது.
லண்டனில் அரங்கேறும் சிம்பொனி
அப்படியான ஆச்சரியத்தை இதோ 48 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறார் இசைஞானி. ஆம்… இசைஞானி, மேஸ்ட்ரோ, ராகதேவன் என இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் புதிய சிம்பொனி இசை அரங்கேற்றம், வருகிற 8 ஆம் தேதியன்று லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்கான இசைப்பணிகளை ராஜா கடந்த பல மாதங்களாகவே மேற்கொண்டு வந்த நிலையில், சமீபத்தில் தனது புதிய சிம்பொனி இசைக்கோர்வை குறிப்புகளை எழுதி முடித்து, அது தொடர்பான தகவலையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து லண்டனில் ராஜா தனது சிம்பொனி இசையை அரங்கேற்றப் போவதை அறிந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரு தினங்களுக்கு முன்னர் ராஜாவின் வீட்டுக்கே சென்று அவரை நேரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோன்று விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
‘Incredible இளையராஜா’

இந்த நிலையில், சிம்பொனி அரங்கேற்றத்துக்காக இன்று சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டார் இளையராஜா. இதனையொட்டி விமான நிலையத்தில் செய்தியாளர்களளிடம் பேசிய ராஜா, ” லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. இது என்னுடைய பெருமையில்லை. நம் பெருமை. நம் தமிழ்நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. நீங்களெல்லாம் சேர்ந்துதான் நான்.
Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா. உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது. எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன். இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை. இறைவனுடைய அருள் நம் எல்லோருக்கும் பரிபூரணமாக இருக்க வாழ்த்துகள்” என்றார்.
‘சிம்பொனியை விளக்க முடியாது, அனுபவிக்க வேண்டும்’
முன்னதாக தனது சிம்பொனி இசை அரங்கேற்றம் குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி அளித்த இளையராஜா, ” தனது பல திரை இசைப்பாடல்களிலும், பின்னணி இசையிலும் சிம்பொனி இசைக் கோர்வைகளைப் பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்திருந்தார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் மணிரத்னம் – ரஜினிகாந்த் காம்போவில் வெளியான ‘தளபதி’ படத்தில் இடம்பெற்ற ‘ராக்கம்மா கையத்தட்டு…’ பாடலில் வரும் interlude எனப்படும் இடைச்செருகலில் சிம்பொனியைப் பயன்படுத்தி இருந்ததாக தெரிவித்திருந்தார்.
சிம்பொனி இசை குறித்துப் பேசும்போது, ” சிம்பொனியை விளக்க முடியாது, அதை அனுபவிக்க வேண்டும். இசை என்பது ஒரு அனுபவம். சிம்பொனியை ரசிக்க அறிவு தேவையா என்று கேட்டால், திரைப்பட இசையை ரசிக்கும்போது நீங்கள் பயன்படுத்திய அறிவு என்ன? எது நல்ல பாடல், எது நல்ல பாடல் இல்லை என்பதை உங்களால் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது. அதை எவ்வாறு வேறுபடுத்தி பார்க்கிறீர்கள்..? அறிவா அல்லது உணர்வா? உணர்வு தான் முக்கியம்” எனத் தெரிவித்திருந்தார்.

உண்மைதான்… இசை என்பது நம்மை பரவசப்படுத்தும், அழவைக்கும், மகிழ்ச்சி கொள்ள வைக்கும், சோகத்துக்குள்ளும் தள்ளும், சுகமாக தாலாட்டவும் வைக்கும் எனும்போது இசைக்கு இன்னொரு பெயர் உணர்வு தானே..?