வரி விதிப்பு: டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் … ‘ போட்டுப் பார்க்கலாம்… வா’ – தொடை தட்டும் சீனா!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்தே அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கை, வர்த்தக கொள்கை மற்றும் வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று உத்தரவிட்டார். அதேபோல, சீன இறக்குமதிகள் மீதான வரியை, 20 சதவீதமாக உயர்த்தியும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்குள் வலி நிவாரண மருந்தான ஃபெண்டானில் (fentanyl) சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க, சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே சீனப் பொருட்களின் மீதான அதிக இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார். பல சட்டவிரோத ஃபெண்டானில் ஏற்றுமதிகள் அல்லது அதன் மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து வருவதால் தங்கள் நாடு பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கருதுகிறது.
‘போட்டுப் பார்க்கலாம்…’ – தொடை தட்டும் சீனா
இத்தகைய சூழ்நிலையில், சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 20 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தி உள்ளதற்கு அந்த நாடும் பதிலடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை உயர்த்துவதற்கு அமெரிக்கா ஃபெண்டானிலை ஒரு “அற்பமான சாக்குப்போக்காக” பயன்படுத்துவதாகவும், “அமெரிக்கா விரும்புவது போர்” என்றால், அது வரியாக இருந்தாலும் சரி அல்லது வர்த்தகப் போராக இருந்தாலும் சரி, பெய்ஜிங் “இறுதிவரை போராட” தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் பெரும்பாலான பொருட்களுக்கான வரிகளை அமெரிக்கா மேலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது குறித்து நியூயார்க் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியானின், “ஃபெண்டானில் பிரச்னை, சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகளை உயர்த்துவதற்கான ஒரு அற்பமான சாக்குப்போக்கு. எங்கள் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க, எங்களது எதிர் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டபூர்வமானவை மற்றும் அவசியமானவை.
மனிதாபிமானம் மற்றும் அமெரிக்க மக்கள் மீதான நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், இந்தப் பிரச்னையைக் கையாள்வதில் அமெரிக்காவிற்கு உதவ நாங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எங்கள் முயற்சிகளை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா சீனாவின் மீது பழியைப் போட முயன்றுள்ளது. மேலும் வரி உயர்வுகள் மூலம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கவும், அச்சுறுத்தவும் முயல்கிறது. அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எங்களைத் தண்டித்து வருகின்றனர். இது அமெரிக்காவின் பிரச்னையைத் தீர்க்கப் போவதில்லை. மேலும் எங்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
வரி உயர்வுக்கு ஃபெண்டானில் காரணமா?

அழுத்தம் கொடுப்பது, வற்புறுத்துவது அல்லது அச்சுறுத்தல்கள் சீனாவை கையாள்வதற்கான சரியான வழி அல்ல. சீனா மீது அதிகபட்ச அழுத்தத்தைப் பயன்படுத்தும் எவரும் தவறான நபரைத் தேர்ந்தெடுத்து தவறாகக் கணக்கிடுகிறார்கள். அமெரிக்கா உண்மையிலேயே ஃபெண்டானில் பிரச்னையைத் தீர்க்க விரும்பினால், செய்ய வேண்டிய சரியான விஷயம், ஒருவருக்கொருவர் சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் கலந்தாலோசிப்பதாகும்.
அமெரிக்கா விரும்புவது போர் என்றால், அது ஒரு வரிப் போராக இருந்தாலும் சரி, வர்த்தகப் போராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, இறுதிவரை போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
வரியை உயர்த்தி சீனாவும் பதிலடி
இதனிடையே டிரம்ப் நிர்வாகம் அனைத்து சீன இறக்குமதிகளுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியதற்குப் பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்தி இறக்குமதிகளுக்கு 15 சதவீத வரிகளை சீனா அறிவித்துள்ளது. கூடுதலாக, “சோளம், சோயாபீன்ஸ், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, நீர்வாழ் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள்” மீது 10 சதவீத வரியையும் சீனா விதித்துள்ளது.
மேலும் ட்ரோன் தயாரிப்பாளரான ஸ்கைடியோ உட்பட 15 அமெரிக்க நிறுவனங்களை அதன் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது சீன நிறுவனங்கள் அவர்களுக்கு இரட்டை பயன்பாட்டு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடா, மெக்சிகோவும் பதிலடி
இந்த நிலையில், தங்கள் நாட்டின் இறக்குமதி பொருட்கள் மீதான டிரம்பின் வரி உயர்வு நடவடிக்கைக்குப் பதிலடியாக கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்கு மதி வரியை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
இந்தியா மீதும் பாய்ந்த டிரம்ப்
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு அமர்வில் பேசிய டிரம்ப், ” அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது. ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மிடம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை” எனக் கூறினார்.
இதன் மூலம் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்க டிரம்ப் திட்டமிட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க வேண்டும் என அவர் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், அண்மையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று டிரம்பை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு முன்னதாகவே அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பைக் குறைத்து இந்தியா அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.