அமெரிக்க துணை அதிபரால் மூண்ட மோதல்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

மெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதலிருந்தே வெளிநாடுகளுடனான உறவுகளில் பல்வேறு அதிரடி நிலைப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அமெரிக்காவின் நீண்ட கால எதிரி நாடாக கருதப்படும் ரஷ்ய அதிபர் புடினுடன் நட்பு பாராட்டத் தொடங்கியதுதான்.

ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுவது நல்ல விசயம் தான் என்றாலும், இது நாள் வரை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆதரவில் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வந்த உக்ரைன் நாட்டை டிரம்ப் அம்போ எனக் கைவிட்டது அந்த நாட்டுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உக்ரைனுக்கு இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்கு மாற்றாக உக்ரைனின் கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் வைத்த நிபந்தனையை வேறு வழியின்றி உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்கா வருமாறு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைத்திருந்தார். அதன்படி ஜெலன்ஸ்கியும் வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகை வந்தார்.

அதனைத் தொடர்ந்து, அதன் பின்னர் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை முதன்முறையாக வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். வழக்கமான புன்னகைகள், பரஸ்பர கைகுலுக்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஊடக கேமராக்கள் முன்னிலையில் இருவரும் சம்பிரதாயமாக பேச்சைத் தொடங்கினர்.

அமெரிக்க துணை அதிபரால் மூண்ட வாக்குவாதம்

முதலில் பேசிய துணை அதிபர் வேன்ஸ், “கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்கா விளாடிமிர் புதினின் உக்ரைன் படையெடுப்புக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதி, வளத்துக்கான பாதை ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவை நல்ல தேசமாக அடையாளப்படுத்துவது அது எப்போதும் ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையை கடைப்பிடிப்பதே. அதிபர் டிரம்ப்பும் அதையே செய்கிறார். ஆனால் ஜோ பைடனின் மோதல் போக்கு உக்ரைன் – ரஷ்யப் போரை மேலும் தீவிரமடையவே செய்தது” என்றார்.

இதனையடுத்து ரஷ்யாவிற்கு டிரம்ப் அளிக்கும் ஆதரவு குறித்து ஜெலன்ஸ்கி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குறுக்கிட்டபோது தான் பிரச்னை உருவானது. ‘வேன்ஸ், நீங்கள் என்ன மாதிரியான ராஜதந்திர அணுகுமுறை பற்றி பேசுகிறீர்கள். யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன? எனக் கேட்டார் ஜெலன்ஸ்கி.

அதற்கு வேன்ஸ், “நான் உங்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ராஜதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறேன். நீங்கள் ஓவல் அலுவலகத்துக்கு வந்து அமெரிக்க ஊடகத்தினர் முன்னிலையில் இவ்வாறு பேசுவது அவமரியாதைக்குரிய செயல்” என்றார்.

ஜெலன்ஸ்கி அப்போது, “போரின்போது எல்லோருக்கும் பிரச்னைகள் ஏற்படும். ஆனால் உங்களுக்கு சாதகமான போக்கு இருப்பதால் நீங்கள் அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் நீங்களும் எதிர்கொள்வீர்கள்” என்றார்.

அப்போது ஆவேசமாகக் குறுக்கிட்ட டிரம்ப், “நாங்கள் என்ன மாதிரியாக உணர்வோம் என்றெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாங்கள் உங்களின் பிரச்னைகளை களையவே முயற்சிக்கிறோம்” என்றார்.

அப்போது ஜெலன்ஸ்கி ஏதோ பேச முயல, மீண்டும் ஆவேசமாக குறுக்கிட்ட டிரம்ப், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடும் சூழலில் நீங்கள் இல்லை. நீங்கள் நல்ல நிலையில் இல்லை. நீங்கள் விளையாடு துருப்புச் சீட்டுகூட உங்களிடம் இல்லை” என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெலன்ஸ்கி, “நான் இங்கே விளையாடவில்லை. நான் தீவிரமாகவே சொல்கிறேன்” என்றார்,

‘3 ஆம் உலகப் போரை நடத்த சூதாட்டம்’

அதற்கு டிரம்ப், “நீங்கள் விளையாடுகிறீர்கள். லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து சூதாடுகிறீர்கள். 3 ஆம் உலகப் போரை நடத்த நீங்கள் சூதாடுகிறீர்கள். நீங்கள் நடந்துகொள்ளும் விதம் தேசத்துக்கு அவமதிப்பு” என்றார். அப்போது குறுக்கிட்ட துணை அதிபர் வேன்ஸ், “நீங்கள் ஒருமுறையாவது நன்றி சொன்னீர்களா?” என்று வினவினார், அதற்கு ஜெலன்ஸ்கி, ”நான் நிறைய முறை எனது நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறேன்.” என்றார். அதற்கும் குறுக்குக் கேள்வியை தொடுத்த வேன்ஸ், “இந்த சந்திப்பில் இதுவரை நீங்கள் நன்றி சொல்லவே இல்லை” என்றார்.

இதற்கிடையில் ட்ரம்ப் ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார். இருவரும் கூட்டாக ஊடகங்களை சந்திக்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஆகியோருக்கான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததால் டேபிளில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் உக்ரைன் அதிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உக்ரைன் அதிபர், அவருடன் வந்த குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பிடம் மன்னிப்பா?

இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜெலென்ஸ்கி அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு “நாங்கள் ஏதாவது மோசமான காரியத்தைச் செய்தோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்கள் மீதான தனது மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டார்.

இந்த வகையான சண்டை இரு தரப்பினருக்கும் நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். நான் மிகவும் வெளிப்படையாக இருக்கிறேன், ஆனால் ரஷ்யா மீதான எங்கள் உக்ரைன் அணுகுமுறையை என்னால் மாற்ற முடியாது. அவர்கள் எங்களுக்கு கொலையாளிகள். அமெரிக்கர்கள் எங்கள் சிறந்த நண்பர்கள் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. ஐரோப்பியர்கள் எங்கள் சிறந்த நண்பர்கள். ரஷ்யாவும் புடிமும் எங்கள் எதிரிகள். நாங்கள் அமைதியை விரும்பவில்லை என்று அர்த்தமல்ல. நாங்கள் யதார்த்தத்தை அங்கீகரிக்க விரும்புகிறோம்” என ஜெலன்ஸ்கி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The nation digest. New movie reviews బ్రహ్మ ఆనందం : బ్రహ్మానందం (రాజా గౌతమ్) చిన్నతనంలో తల్లిదండ్రులను కోల్పోయాడు. Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam.