‘இந்தி மொழி விழுங்கி ஏப்பம் விட்ட இந்திய மொழிகள்’ … மத்திய அரசு மீது ஸ்டாலின் அடுத்த ‘அட்டாக்’!

மத்திய அரசின் மும்மொழி கொள்கை விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக பள்ளிகளில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்றும், அதில் மாற்றம் இல்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. இது விஷயத்தில் திமுக – பாஜக இடையே வார்த்தை மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு மீதான தனது அடுத்த தாக்குதலைத் தொடுத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தி மொழி வட மாநிலங்களில் பேசப்பட்டு வந்த பல மொழிகளை எப்படி விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது என்பது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று உதாரணங்களுடன் விளக்கி பதிவிட்டுள்ளார்.

” மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே, இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.
ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் “இந்தி இதயப்பகுதிகள்” அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!” என ஸ்டாலின் அதில் விளக்கி உள்ளார்.
முதலமைச்சரின் இந்த சமூக வலைதளப் பதிவை, திமுக ஐடி விங்கும், திமுக ஆதரவாளர்களும் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட, குறிப்பாக இந்தி மொழி விழுங்கி ஏப்பம் விட்ட மொழிகளாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்ட மொழிகள் பேசப்பட்டு வந்த வட மாநிலங்களில் உள்ள மக்களின் பார்வைக்குச் சென்று சேரும் வகையில், அதனை பரப்பத் தொடங்கி உள்ளனர்.
‘அலெர்ட்’ ஆன பஞ்சாப்

இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பெய்ன்ஸ், தங்கள் பாடத்திட்டத்தில் பஞ்சாபி மொழியை ஒரு பாடமாக சேர்க்காத எந்தவொரு பள்ளிக்கும் அங்கீகாரம் மறுக்கப்படும் என்று கல்வி வாரியங்களை கடுமையாக எச்சரித்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.