“மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம்”… எச்சரித்த ஸ்டாலின்… தமிழகத்தில் மீண்டும் வெடிக்கும் மொழிப்போர்!

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத வரை தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி வழங்கப்பட மாட்டாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மும்மொழி கல்விக்கொள்கையை ஏற்காததை காரணம் காட்டி தமிழகத்துக்கான கல்வி நிதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்றும், தமிழகத்துக்கு ஏன் புதிய கல்விக் கொள்கை தேவையில்லை என்பதை விளக்கியும் பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார்.

இதனையடுத்து, “புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். ‘சமக்ர சிக்ஷ அபியான்’ மற்றும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தின் கீழ் தமிழக அரசு இழப்பது, ரூ. 2,500 கோடி அல்ல; ரூ. 5,000 கோடி! மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார். நான் கேட்கிறேன். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியைத் தருவோம் என்று ‘Blackmail’ செய்வதற்கு பெயர் என்ன? அரசியல் இல்லையா?

தர்மேந்திர பிரதான்

கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிகள் கொண்ட இந்திய நாட்டை – ஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா?பல்வேறு மொழி பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்பது அரசியல் இல்லையா? ஒரு திட்டத்திற்கான நிதியை, மற்றொரு திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாக மாற்றுவது அரசியல் இல்லையா? நீங்கள் செய்வது அரசியலா? இல்லையா? என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?. மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் நிதியை செலவு செய்பவர்கள் நாங்கள். அரசின் நிதியை மதவெறிக்காகவும் இந்தி – சமஸ்கிருத திணிப்புக்காகவும் செலவு செய்பவர்கள் நீங்கள்.

‘மத்திய அரசுக்கான வரியை தரமாட்டோம்’

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே… தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்… மறந்துவிடாதீர்கள்! கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம்! அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை! அதைகூட புரிந்துக்கொள்ளாதவர்கள் ஒன்றியத்தை ஆள்வதுதான் இந்தியாவுக்கே மிகப்பெரிய சாபக்கேடு!

தேசியக் கல்விக் கொள்கை என்பதே, கல்வியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. இந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டிருக்கிறது! நேரடியாக திணித்தால் எதிர்ப்பார்கள் என்று, கல்விக் கொள்கை மூலமாக முலாம் பூசி திணிக்கிறார்கள்! தாய் மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்.

தர்மேந்திர பிரதான் அவர்களே… தாய்மொழித் தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். இந்தி மொழியால் தங்களின் தாய்மொழிகளை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சதி திட்டத்தின் ஆபத்து புரியும்! நீங்கள் வந்துதான் வளர்ப்பீர்கள் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை!

ஒன்றிய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று ஆசை படாதீர்கள்! தமிழுக்கும் – தமிழ்நாட்டுக்கும் – தமிழினத்துக்கும் எதிரான எந்தச் செயல்பாடுகளும் நான் இருக்கும்வரைக்கும், தி.மு.க. இருக்கும்வரைக்கும் நிச்சயம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது” என ஆவேசமாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Detained kano anti graft boss, muhuyi released on bail. 4 michigan counties under a winter weather advisory until thursday morning axo news. 萃取?.