1,255 புதிய வழித் தடங்களில் மினி பேருந்துகள் … கிராமப்புற சாலை இணைப்பில் தமிழக அரசு தீவிரம்!

ஒரு மாநிலத்தின் கல்வி, தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு போக்குவரத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் குக்கிராமங்களையும் அந்தந்த பகுதிகளிலுள்ள முக்கிய ஊர்களுடன் இணைப்பதில் மினி பேருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை மினி பேருந்து போக்குவரத்து திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், கடந்த 1997 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. திமுக அரசு கொண்டு வந்த இந்தத் திட்டம் மூலம் எல்லா குக்கிராமங்களுக்கும் பேருந்துச் சேவை கிடைத்தது.ஆனால் கடந்த 2001 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மினி பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே இந்த மினி பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் கொண்டுவரப்பட்டது. சென்னை மாநகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்தச் சேவை கொண்டுவரப்பட்டது.
என்றாலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலோ, அல்லது பிற மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களிலோ இந்த மினி பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வந்தனர். மீண்டும் இனி பேருந்து போக்குவரத்து இயக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேறும் விதமாக தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு “விரிவான மினி பேருந்து திட்டம் 2024 ” ஐ செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.
1,255 புதிய வழித் தடங்களில் மினி பேருந்து சேவை
அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில், புதிய ‘விரிவான மினி பேருந்து திட்டம்’ குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ‘தமிழகத்தில் புதிய மினி பேருந்துகளை இயக்க, 1,810 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 1,255 தடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பேருந்துகளை இயக்க, 278 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கூடுதலாக விண்ணப்பங்கள் வரும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தை மே 1 ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். ஏற்கனவே தமிழகத்தில், 2,780 மினி பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சில இடங்களில் வழித்தடங்களை மாற்றி அமைக்க, 540 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதுபோல புதிய வழித்தடங்கள் தேவைப்படின் மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம்.
திமுக ஆட்சியில், 15,000 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் பத்தாண்டுகளில், 14,000 பேருந்துகள் வாங்கப்பட்டன. கூடுதலாக வாங்குவதற்கு, 8,000 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 3,000 பேருந்துகள் வந்து விட்டன. மீதி, 5,000 பேருந்துகளும் வந்த பின், பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு விடும். வரும் ஆண்டுக்கும் 3,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அவை பயன்பாட்டுக்கு வந்ததும், பழைய பேருந்து பிரச்னை தீர்வுக்கு வந்துவிடும்” எனத் தெரிவித்தார்.