“கடந்த காலம் எப்பொழுதும் அமைதியாக இருக்காது” – ‘த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகம்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. கடந்த 2013 ஆம் ஆண்டு இப்படத்தில் மோகன்லால் உடன் மீனா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் இப்படம் கமல்ஹாசன் – கெளதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
மேலும் தெலுங்கு, இந்தி, சீன மொழி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லையென்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நீதிமன்றக் காட்சியும் படத்தை வெற்றியடையச் செய்தன.
இதனையடுத்து ‘த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. அதற்கேற்ப இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருந்தார். 2025 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக ‘த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகம் எடுக்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பை மோகன்லால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இது குறித்த அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “கடந்த காலம் எப்பொழுதும் அமைதியாக இருக்காது” எனப் பதிவிட்டுள்ளார்.