ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு!

மிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ‘ஃபெஞ்சல்’ புயலை ‘கடுமையான இயற்கை பேரிடர்’ என்று அறிவித்ததோடு, தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க, ஒன்றிய அரசும் பெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்தது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், புயலால் பாதிப்பிற்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க பல்வேறு துறைகளுக்கு 80 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவித்தும், சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுத்து, மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-, நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000/-, நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500/- நிவாரணம் என்ற அடிப்படையில் விரைந்து நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், இராணிப்பேட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத் தொகை, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The nation digest. The future of health tech : dr. 含义.