பிங்க் என்றாலே பெண்களுக்கு பிடித்தமான நிறமா?
பிங்க் நிறம் என்றாலே அது பெண்களுக்கானது, பெண்கள் மட்டும்தான் பெரும்பாலும் பிங்க் நிறத்தை விரும்புவார்கள் என்கிற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆண்கள் பிங்க் நிறத்தில் ஆடை அணிந்தால், ‘நீ என்ன பொண்ணா பிங்க் கலர்ல ட்ரெஸ் போட்டிருக்கிற..?’ என்று கூறி கேலி செய்வார்கள். ஆண்களுக்கு பிங்க் நிறம் பிடித்திருந்தால் கூட மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்று அதை வெளியில் சொல்லமாட்டார்கள்.
பாலினத்தை வைத்து நிறத்தைக் குறிப்பிடுவது எப்படித் தொடங்கியது?
19-ம் நூற்றாண்டில் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகள் மென்மையான நிறங்களில் இருக்கவேண்டும் என நினைத்தார்கள். அந்த வரிசையில் சேர்ந்த நிறங்கள்தான் பிங்க் மற்றும் நீல நிறம்.
1918-ம் ஆண்டு பிங்க் நிறம் ஆண் குழந்தைகளுக்கும், நீல நிறம் பெண் குழந்தைகளுக்கும் என Earnshaw’s infants பிரிவு வகைப்படுத்தியது. இந்த சூழ்நிலையில், ஆண்களுக்கு பிங்க் நிறமும், பெண்களுக்கு நீல நிறமும்தான் பிடித்த நிறம் என்பதுபோல திணிக்கப்பட்டது.
பிங்க் நிறம் வலிமையான நிறம் என்பதால் அது ஆண்களுக்கான நிறம் என்று சொல்லப்பட்டது. நீல நிறம் அழகான நிறம் என்பதால் அது பெண்களுக்கான நிறமாகச் சொல்லப்பட்டது.
இதன்பிறகு 1940 -ம் ஆண்டு பிங்க் நிறம் மென்மையாக இருக்கிறது என்பதால் அது பெண்களுக்கென மாற்றப்பட்டது. ஆண்களுக்கு நீல நிறம் மாற்றப்பட்டது.
இந்த இரண்டு நிறங்கள் மட்டுமே பாலினத்திற்கு வகைப்படுத்தப்பட்டதால், உலகத்தில் இந்த இரண்டு பாலினம் மட்டும் தான் இருக்கின்றன என்பது மாதிரியான பிம்பம் இருந்தது. பெண்ணாக இருந்து நீல நிறம் பிடித்திருந்தால், அந்த பெண்ணிடம் ஆண் தன்மை இருக்கிறது என்றும், ஆணாக இருந்து பிங்க் நிறம் பிடித்திருந்தால் அந்த ஆணுக்குப் பெண் தன்மை இருக்கிறது என்றும் முத்திரை குத்தப்பட்டது. தற்போது வரை அந்த பாகுபாடு இருந்துவருகிறது.
நிறத்தை வைத்து பாலினத்தைக் குறிப்பிடுவது சரியான பார்வையாக இருக்காது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறத்தை வைத்து பாலினத்தைக் குறிப்பிடுவதை மக்கள் ஏற்றுக் கொண்டாலும், இப்போதைய தலைமுறையினர் அதை ஏற்க மறுக்கின்றனர். எந்த பாலினமாக இருந்தாலும், யாருக்கு எந்த நிறம் பிடித்திருந்தாலும் அது அவர்களின் விருப்பமாகவே கருதவேண்டும். அதை விடுத்து, அவர்களுக்குப் பிடித்த நிறத்தை வைத்துக்கொண்டு அவர்களின் பாலினத்தைக் கேள்விக்குறியாக்கக் கூடாது.