‘ஆளுநர் நியமனமும் அரசியல் நிர்ணய சபை விவாதமும்’ – திமுக-வின் அனல் கக்கும் தீர்மானம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மரபுப்படி, அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை ஆற்ற வந்தார் ஆளுநர் ரவி. ஆனால், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, தான் ஆற்ற வேண்டிய உரையை ஆற்றாமலேயே அவையிலிருந்து வெளியேறினார்.
இந்த நிகழ்விலிருந்து அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது. புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத நிலையில், கடந்த ஞாயிறன்று குடியரசு தின விழாவில் பேசிய ஆளுநர் ரவி தமிழக அரசு மீதான தனது அடுத்த தாக்குதலைத் தொடுத்தார். முதலீட்டாளர்கள் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் வளர்ச்சியானது சரிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், மொத்த மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல்-வெளிப்பாட்டில் பின்தங்கியுள்ளதாகவும், மாநில அரசின் உயர்கல்விக் குழு தயாரித்த தரமற்ற பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், குடியரசு தின விழாவையொட்டி அன்று மாலையில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட அரசு தரப்பில் யாரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். அத்துடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்ளவில்லை.
ஆளுநருக்கு எதிராக அனல் கக்கும் தீர்மானம்
இந்த நிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமாக ஆளுநர் ரவியின் சமீபத்திய நடவடிக்கைகளை விமர்சித்தும், ஆளுநர் பதவி தொடர்பான அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தைக் குறிப்பிட்டும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அவை வருமாறு…

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை – அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட – ஆளுநர்களுக்கு “நடத்தை விதிகள்” (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஓர் அங்கம். ஆனால் அந்த அவையின் மரபை மதிக்கமாட்டார். சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவார். மாநில அரசின் “Constitutional Head” ஆளுநர். ஆனால் மாநில அரசின் ஆளுநர் உரையை படிக்கமாட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்துவார். சமஸ்கிருதம் – இந்தி மொழி புகழ் பாடுவார்.
ஆளுநர் மாளிகையின் ஒட்டுமொத்த செலவும் மாநில அரசின்- அதாவது மாநிலத்து மக்களின் வரிப்பணம். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர் ஆளுநர் மாளிகையில் அமர்ந்து எதிர்கட்சித் தலைவர் போல் அரசியல் செய்வார். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து “துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகத்தை” உருவாக்குவார். ஆனால் அதே பல்கலைக்கழகங்களில் பாஜக அரசியல் பிரசங்கம் செய்வார். அக்கப்போர் அரசியல் மட்டுமே ஆளுநரின் அஜெண்டாவாக இருக்கிறது.

‘ஆளுநரை நியமிப்பதற்குப் பதில் ஏன் தேர்ந்தெடுக்க கூடாது’ என அரசியல் நிர்ணய சபையில் விவாதித்த போது – “அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடுவார். அப்படி அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனநாயகத்தை அடிமைப்படுத்துவது போலாகிவிடும் (amount to surrender of democracy)” என சட்ட அறிஞர்கள் குறிப்பிட்டனர். நியமிக்கப்பட்ட ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று அதைத்தான் அடாவடியாகச் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியிலோ, தமிழ்நாட்டு மக்களின் நலனிலோ, தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலோ அவரே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்திலோ நம்பிக்கை துளிகூட இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஆர்வம் வெகுஜன விரோத வலதுசாரி அரசியல் மட்டும் தான். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
“அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து துணை நிற்க வேண்டிய அரசியலுக்கு அப்பாற்பட்டவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்” என அரசியல் நிரணய சபை எதிர்பார்த்தது. ஆனால் ஆளுநர் ரவி நியமனத்தில் அது தவிடுபொடியாகிப் போனது என்பதை இந்த எம்.பி.க்கள் கூட்டம் மிகவும் வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறது.
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அவர்கள், “இந்தியாவில் உள்ள ஆளுநர்கள் எங்கு செயல்படக் கூடாதோ அங்கு செயல்படுகிறார்கள். எங்கு செயல்பட வேண்டுமோ அங்கு செயல்படாமல் இருக்கிறார்கள்” எனக்குறிப்பிட்டு, “ஆளுநர்கள் பற்றிய வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவது சோக கதை” என்றார்.
இந்த கருத்திற்கு முற்றிலும் பொருத்தமான ஒரு ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் ரவி இருப்பது உள்ளபடியே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது. அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கவே ஆளுநராக அமர்ந்து இருக்கிறார்.
குடியரசு தினத்தில் கூட அரசியல் செய்வதை அவர் விட்டு வைக்கவில்லை. எந்த எதிர்கட்சியும் கூட குடியரசு தின வாழ்த்தில் அரசை குறை கூறுவதில்லை. ஆனால் “By Order of Governor” என ஒவ்வொரு ஆணையும் வெளிவரும் தன் அரசையே குடியரசு தின வாழ்த்தில் குறை சொல்லி -நாட்டின் பெருமையை – தமிழ்நாட்டின் சிறப்பை சிறுமைப்படுத்தியதற்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை- அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர் ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நன்னடத்தை விதிகளை (Code of Conduct) உருவாக்கிட வேண்டும் என்றும், மாநில அரசின் கோப்புகள், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் ஆகியவற்றில் கையெழுத்திட ஆளுநருக்கு காலநிர்ணயம் (Time Frame) செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள அந்த கோரிக்கையையும் நடைபெற இருக்கும் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இந்த எம்.பி.க்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
இதர தீர்மானங்கள்

இவை தவிர,
மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒன்றிய பாஜக அரசை பணிய வைத்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர் அவர்களுக்கும், துணை நின்ற மக்களுக்கும் நன்றி!
உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது” என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது!
கூட்டாட்சி தத்துவம் மாநில கல்வி உரிமை – உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி கழக மாணவரணியின் சார்பில் 06.02.2025 அன்று போராட்டம் நடத்தப்படும் என்றும், கழக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய பாஜக. அரசுக்கு கண்டனம்!
தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும் என மேலும் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.