மின் உற்பத்தியில் சாதனை படைத்த கூடங்குளம் அணு உலைகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முதலாவது அணு உலை கடந்த 2013 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதில் தான் அணு எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மிகவும் தடிமனான எஃகு மூலம் தயாரிக்கப்படும் இந்த அணு உலை 320 டன்கள் எடை கொண்டது.

இங்கு அணு உலை அமைக்கப்படுவதற்கு எதிராக தீவிர போராட்டங்கள் ஒருபுறம் நடந்தாலும், அணு உலை அமைப்பதில் மத்திய அரசு காட்டிய தீவிரத்தால் அணு உலை செயல்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து இரண்டாவது அணு உலை, கடந்த 2016 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த 2 அணு உலைகளும் மின்சார உற்பத்தி பயன்பாட்டில் உள்ளன.

ஒரு லட்சம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி

இந்த நிலையில், இந்த 2 அணு உலைகளிலும் கடந்த டிசம்பர் மாதம் வரை ஒரு லட்சம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடங்குளம் அணு உலை நிர்வாக இயக்குநர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில்,”கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் தற்போது இயங்கி வரும் 2 அணு உலைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அணு ஆற்றல் சக்தியின் அபரிதமான முன்னேற்றத்தின் வளர்ச்சியாகும்.

1 ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்ட 60,852 மில்லியன் யூனிட், 2 ஆவது அணு உலை மூலம் 46,813 மில்லியன் யூனிட் மின்சாரம் என கடந்த டிசம்பர் மாதம் வரை ஒரு லட்சத்திற்கும் மேலான மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மறைமுகமாக 86 மில்லியன் கார்பன் டை ஆக்ஸைடு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டது.

அணு உலை நிர்வாகம், கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன், மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர் வசதி மற்றும் பல்வேறு வகை பொது பயன்பாடுகள் போன்ற உட்கட்டமைப்புகளுக்காக தற்போது வரை ரூ.124 கோடி சமூக நல மேம்பாட்டு நிதியின் கீழ் செலவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ல் 3, 4 ஆவது அணு உலை

இதனிடையே 3, 4 ஆவது அணு உலைகளின் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 76 சதவீத பணிகள் கடந்தாண்டு இறுதியில் முடிவடைந்து உள்ளன. 2026 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

5 மற்றும் 6 ஆவது அணு உலைகளின் பணிகள் 33 சதவீதம் கட்டுமானப் பணிகளோடு வேகமாக நடந்து வருகிறது. இதனிடையே இங்கு வைக்கப்பட வேண்டிய 6 ஆவது அணு உலையை ரஷ்யா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. கப்பல் மூலம் 11,000 கி.மீ பயணம் செய்து இந்த அணு உலை இந்தியா வந்து சேரும். இங்கு அணு உலை கட்டுமான பணிகளில் ரஷ்யாவின் ரோசாடாம் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு தேவையான 4 நீராவி ஜெனரேட்டர்களையும், இந்தியாவுக்கு இந்த ஆண்டில் ரஷ்யா அனுப்பி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Tägliche yacht und boot. Er min hest syg ? hesteinternatet.