வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கலாமா?
நம்மில் நூற்றில் 90 சதவிகிதம் பேர் காலையில் எழுந்தவுடன் காபியோ அல்லது டீயோ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம்.
ஆனால், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் அது வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, வயிற்றில் எரிச்சல் தன்மையை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிக்கக் கூடாது என்றால் எப்போதுதான் அதையெல்லாம் குடிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். காலை உணவுக்குப் பிறகும், மதிய உணவுக்கு முன்பும் டீ, காபி குடிப்பது சிறந்தது. இதைப் பின்பற்றினால் வளர்சிதை மாற்றச் செயல்முறைகள் சீராகச் செயல்படும்.
அதுபோல வயதானவர்களுக்கு காபியின் தாக்கம் 7 மணி நேரத்திற்கும் மேல் இருப்பதால், அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு நாளைக்கு 7, 8 முறை டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நம்மில் பல பேர் இருப்பார்கள். வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லது இல்லை என்று சொன்னாலும் அவர்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள அடிக்கடி டீ, காபி குடித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்வதே அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது.