இதயத் துடிப்பை நிறுத்திக்கொண்ட டாக்டர் கே.எம். செரியன்!

ந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் என்று போற்றப்பட்ட டாக்டர் கே.எம்.செரியன் தனது இதயத் துடிப்பை நிறுத்திக்கொண்டார். செரியனின் மறைவு, மருத்துவ உலகுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது.

82 வயதான கே.எம்.செரியன், பெங்களூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் இரு தினங்களுக்கு முன்னர் கலந்து கொண்டார். அங்கு அவர், வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கே.எம்.செரியன், மருத்துவ துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.

முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர்

மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி, வெற்றிகரமாக இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்து காட்டியவர் கே.எம். செரியன். கேரள மாநிலம், காயங்குளத்தில் 1942 ஆம் ஆண்டில் பிறந்த செரியன், மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் பயின்றார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவு விரிவுரையாளராக பணியை தொடங்கினார்.

1970 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு அவர் கார்டியோ தொராசிக் சர்ஜரியில் மேற்படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் நியூசிலாந்து, அமெரிக்காவிலும் பணியாற்றினார். பின்னர் இந்தியா திரும்பிய அவர், 1975 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது தான் இந்தியாவின் முதல் கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்து புகழ் பெற்றார்.

அவர் இந்த அறுவை சிகிச்சையை செய்தபோது இப்போது உள்ளது போன்ற பெரிய மருத்துவ வசதிகள் கிடையாது. குறிப்பாக சொல்வதானால் ஃபோர்செப்ஸ், ஹெட்லைட்கள் அல்லது அருகில் ஜெனரேட்டர்கள் போன்ற எந்த வசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் முதல் இதய-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முதல் குழந்தை இதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்த பெருமையும் அவருக்கு உண்டு.

இதயநோய்க்கு சிறந்த மருத்துவர் என்றால் அது டாக்டர் கே.எம்.செரியன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். இதயநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை உயிர் பிழைக்க வைத்துள்ளார். இவர், சென்னை முகப்பேர் அருகே பிராண்டியர் லைப்-லைன் மருத்துவமனையை நிறுவி இதயநோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானேரை காப்பாற்றி உள்ளார். இதுமட்டுமில்லாமல் பல்வேறு தொண்டுகளையும் செய்துள்ளார்.

நீளமான சாதனை பட்டியல்

டாக்டர் செரியன் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல; அவர் ஒரு நிறுவனம். பத்மஸ்ரீ விருது பெற்றவரான இவர், இந்தியாவில் இதய பராமரிப்புக்கு அளித்த பங்களிப்புகள் ஒப்பிடமுடியாதவை. 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையைச் செய்வதிலிருந்து, நாட்டின் முதல் இதய-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, குழந்தை இதய அறுவை சிகிச்சை மற்றும் பலவற்றிற்கு முன்னோடியாக இருந்தவர் வரை, அவரது முதல் சாதனை பட்டியல் நீளமானது.

இதய அறுவை சிகிச்சையில் சிறப்பு வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை உலக அரங்கில் இடம்பெற வைத்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனை மற்றும் இந்தியாவின் முதல் மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அறிவியல் பூங்காவான ஃபிரான்டியர் மெடிவில்லே போன்றவற்றை நிறுவியவர். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா ஆகியோருக்கு கவுரவ அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர்.

டாக்டர் கே.எம். செரியன் மறைந்தாலும், அவர் காப்பாற்றிய எண்ணற்ற உயிர்கள், அவர் பயிற்றுவித்த கைகள் மற்றும் அவர் குணப்படுத்திய இதயங்களில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு தான் இருக்கும். அவரது சாதனை வருங்கால மருத்துவ தலைமுறைகளுக்கு நிச்சயம் ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும்!

டாக்டர் செரியனின் இறுதிச் சடங்கு சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில், வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Born in krishnanagar, west bengal, soumitra chatterjee developed an early interest in literature, theater, and acting. 최신 온라인 슬롯. © 2023 24 axo news.