குறையும் அரிசி விலை… குறையாத ஏற்றுமதி… காரணம் என்ன?

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஒடிசா உட்பட இந்தியாவில் நெல் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களில் வழக்கமாக 130 மில்லியன் டன் நெல் உற்பத்தி இருக்கும். ஆனால், இந்த முறை அது 140 மில்லியன் டன் அளவுக்கு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னொருபுறம், அரிசி ஏற்றுமதியும் சீராகவே இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நெல் அறுவடையானது பொதுவாக சம்பா, குறுவை என இரண்டு போகங்களாக நடைபெறுகிறது. இதில் சம்பா சாகுபடியில் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். சம்பா அறுவடையில் 75 சதவீத விளைச்சலும், குறுவை சாகுபடியில் 25 சதவீதம் விளைச்சலும் கிடைக்கும்.
அமோக நெல் விளைச்சல்
இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பெய்ததால், நெல் விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில், சம்பா சாகுபடியும் தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் விளைச்சல் பாதிப்பு இருந்தன. இதனால் சம்பா சாகுபடி விளைச்சல் குறையும் எனத் தெரிகிறது.
ஆனால், தமிழகத்தில் தான் இந்த நிலை. ஆனால், நெல் விளைச்சல் இருக்க கூடிய மற்ற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய விளைச்சல் நன்றாக உள்ளது. இந்தியாவில் வழக்கமாக 130 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் நிலையில், இம்முறை அது 140 மில்லியன் டன் அளவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

குறையும் அரிசி விலை
விளைச்சல் அதிகரிப்பால் 60 கிலோ நெல் மூட்டை ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. இதுவே, கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.1700 முதல் ரூ.1800 வரை இருந்தது. தற்போது நெல் விலை குறைந்திருப்பதால் அரிசி விலையும் கணிசமாக குறையும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, அரிசி விலை கிலோவுக்கு ரூ .2 முதல் ரூ.3 வரை குறையும் என்றும், பிப்ரவரி மாதத்தில் இருந்து அரிசி விலை குறைவு அமலுக்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல், விளைச்சல் அதிகரிப்பால் வருகிற ஆகஸ்ட் மாதம் வரை அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறையாத ஏற்றுமதி
இதனிடையே, இந்தியா முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டு பருவமழை கைவிட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்தது. இதனால் அரிசி விலை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உயர்ந்து இருந்தது. இதன் காரணமாக, சன்னரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அரிசி விலை கடும் ஏற்றம் கண்டது. இதற்கிடையே தான், 2024 ஆம் ஆண்டில் இரண்டு பருவமழைகளும் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததால் நெல் விளைச்சலும் அதிகமானது.
விளைச்சலை முன்கூட்டியே உணர்ந்தே அரிசிக்கான தடையை நீக்கியும், அதற்கான சுங்க வரியை விலக்கியும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததாக சொல்லப்படுகிறது.

அதே சமயம் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி நிலையாக இருந்தது. ஏனெனில் உயர் ரக பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி, பாஸ்மதி ரகம் அல்லாத அரிசியின் வெளிநாட்டு விற்பனையில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டியது. மேலும், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் 2024 டிசம்பர் காலாண்டில் ஏற்றுமதி மீண்டும் உயர்ந்ததோடு, ஆண்டின் முதல் பாதியில் பற்றாக்குறையையும் ஈடுசெய்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.