ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்ட பின்னணி…

ரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதியன்று அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துவிட்டது. பாஜக தரப்பில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பில் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

அதே சமயம் இந்த முறையும் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தங்களுக்கே தரப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், உள்ளூர் திமுக-வினரோ இந்த முறை தங்கள் கட்சியே போட்டியிட வேண்டும் என கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். இதனால், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

ஒப்புக்கொண்ட காங்கிரஸ்

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்த முறை திமுக போட்டியிட காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக போட்டியிடக் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குழப்பத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, திமுக போட்டியிடுவது என்று உறுதியானது.

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

திமுக போட்டியிடுவது உறுதியானதைத் தொடர்ந்து, அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் விவாதங்களும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்தன.

இந்த நிலையில், திமுக வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அறிவிப்பின் பின்னணி…

நெசவாளர் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார், ஜவுளி மொத்த வியாபாரம் செய்துவருகிறார். பொது நிர்வாகத்தில் (Public administration) முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு அதிமுக-வில் வார்டு பிரதிநிதியாகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சந்திரகுமார், பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரானார். தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், விஜயகாந்த்தின் முக்கியத் தளபதியாகவும் விளங்கினார்.

2011 தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் நின்று வெற்றி பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த சந்திரகுமாருக்குக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன், 2016 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம், சந்திரகுமார் தோல்வி அடைந்தார்.

அடுத்து வந்த 2021 தேர்தலில், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வசம் சென்றதால் சந்திரகுமார் போட்டியிட முடியாமல் போனது. இந்த நிலையில் சந்திரகுமாருக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள் இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டும் என அந்த சமூக சங்கமும் கோரிக்கை வைத்திருந்ததும் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க கூடுதல் ப்ளஸ் பாயின்ட்டாக அமைந்தது.

திமுக ஆளும் கட்சியாக இருப்பதாலும், கடந்த இரண்டு முறையும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெற களத்தில் தீவிரமாக பணியாற்றியதும் திமுக-வினர் தான் என்பதால், சந்திரகுமார் இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது சுலபமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. அப்படி வெற்றி பெற்றால், வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலிலும் இந்த தொகுதியில் போட்டியிட இவருக்கே திமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

current events in israel. avg fantasy pts(batting). Serie a games postponed after death of pope francis.