பல்கலை. துணைவேந்தர்கள் நியமனம்…இனி ஆளுநரின் கையே ஒங்கும்… ஏன்?

சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதனால், இப்பல்கலைக்கழகங்களிலும் நிர்வாக பணிகள் முடங்கி உள்ளதாகவும், பட்டமளிப்பு விழாக்களையும் உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் கல்வியாளர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். மேலும், பட்டப் படிப்புக்கான சான்றிதழ்களில் அதிகாரிகளே கையெழுத்துடுவது பட்டம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பைக் கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பேசு பொருளானது. அப்பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பல கேமராக்கள் செயல்படாமல் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாக செயல்பாடுகளில் காணப்படும் சுணக்கமே காரணம் என்றும், பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் இல்லாதாதே இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் தற்போது தடையாக இருக்கும் முக்கிய பிரச்னையே, துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்துவது தான். ஆனால், இதனை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது.

வழக்கமாக துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநர், தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு பிரதிநிதி என மூவர் இடம் பெறுவர். தேடுதல் குழுவில் நான்காவதாக யுஜிசி பிரதிநிதியை ஆளுநர் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் நிலையில், அதனை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. இதனால், காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இதனிடையே, “கல்வி தொடர்பானவை நீங்கலாக யுஜிசி விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல. துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான பிரிவை பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் இடம்பெறச் செய்வதே இதற்குத் தீர்வு” என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

புதிய யுஜிசி விதி

இந்த நிலையில், இவ்விவகாரத்தில் துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய விதியில், தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இனி ஆளுநர் கையே ஓங்கும்!

இதன் மூலம், துணைவேந்தர் தேடல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மத்திய அரசு அல்லது ஆளுநருக்கு இணக்கமானவரே தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று தான், சட்டசபையில் தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி, தான் படிக்க வேண்டிய ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்து அவையிலிருந்து ஆளுநர் ரவி வெளியேறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஆளுநரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இத்தகைய சூழ்நிலையில் தான், துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் அடுத்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது தமிழக அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Explore luxury yachts for charter;. Er min hest overvægtig ? tegn og tips til at vurdere din hests vægt.